
விடியற்காலை ஏ2பி புண்ணியத்தால் தீர்ந்தது வயிற்றுப்பசி ; கலை தாகம் அடங்காததால் புரப்பட்டதெங்கள் மகிழுந்து வெட்டுவான் கோயிலை வியக்க…
மார்கழி மாதமும் மதுரை மாநகரமும் ஒரு அற்புதமான கலவைதான்! அதோடு, விடியற்காலை ஏ2பியில் சுடசுட தோசையும் சேர்ந்துகொண்டால், கேட்கவா வேண்டும்? ‘வானகம் இங்கு தென்பட வேண்டும்’ என்று பாரதி பாடுவதை மெய்ப்பித்தது இந்த கூட்டணி. ஆனால், அன்று எங்களுக்காக காத்திருந்த மற்ற நிகழ்வுகளோடு ஒப்பிட்டால், இது வெறும் வானகத்தின் வாயிலாகத்தான் தோன்றுகிறது.
காலை உணவருந்தி சில நிமிடங்களுக்குள் மதுரை – திருநெல்வேலி நெடுஞ்சாலையில், 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்தோம். “TURN RIGHT” என்று Google அக்கா கதறியதும், நெடுஞ்சாலையிடம் விடைபெற்றுக்கொண்டு, கழுகுமலை எனும் சிற்றூரினுள் புகுந்தோம். ஒரு சிறுவர் பூங்காவின் நுழைவில் மகிழுந்திடமும் விடைபெற்றுக்கொண்டு, கால்களை செயற்களத்தில் செலுத்தினோம்.

கழுகுமலை எனும் குன்றின் மேல் ஏறத்துவங்கினோம். படிக்கட்டில் மேல் நோக்கிச் செல்லச் செல்ல, காலத்தில் பின்னோக்கிச் சென்று கொண்டிருந்தேன். கள்வர் ஆட்சிக்காலத்தில் வாழும் நான், களப்பிரர் ஆட்சிக் காலத்திற்கு சென்றுவிட்டேன்.
களப்பிரர் ஆட்சிக் காலத்தில், சில சமணத் துறவிகளும், அவர்களிடம் பயின்ற மாணவர்களும் இந்தக் கழுகுமலையில் தங்கி இருந்திருக்கிறார்கள். இவர்கள், இந்த மலையின் ஒரு பகுதியில் பல்வேறு சிற்பங்களை செய்துள்ளார்கள். இதில் பெரும்பாலான சிற்பங்கள் ஒரு பெரிய பாறையின் சரிவில் செதுக்கப்பட்டுள்ளன. “சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்களைத் தாண்டி, இங்கு தத்தம் நெருங்கிய உலக உறவுகளுக்காக நினைவுச் சிற்பங்களை செய்திருக்கிறார்கள்” என்று அங்கு பணிபுரிந்தவர் சொன்னார்.


எனோ இந்த தகவல் வினோதமாக தோன்றியது. ஒரு சிற்பத்தை காண்பித்து, “இது ஒரு மாணவன் தன் தாயின் நினைவாகச் செய்தது” என்று சொன்னார், அந்த சிற்பங்களை பார்த்துக்கொள்ளும் ஊழியர். அதைச் செய்யும் பொழுது அந்த மாணவனின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? என்ற எண்ணத்தோடு அந்த சிற்பத்தை பார்த்தேன். தாயின் நினைவுகளும், அவளைப் பிரிந்த சோகமும் ஒரு மாணவனை உளிகொண்டு பாறையை வெட்டச்செய்திருக்கிறது. இன்று அந்த தாயும் இல்லை, மாணவனும் இல்லை. ஆனால், அவர்களின் கதை சொல்லும் ஒரு சதுரடிப் பாறை இன்றும் உள்ளது. இதுதான் கலையின் அற்புதம் என்று தோன்றியது.

சமண சிற்பங்களோடு சில நிமிடங்கள் கழிந்தன. பிறகு மலையின் மற்றொரு பகுதியில் அமைந்திருந்த வெட்டுவான் கோவிலைக் காணச் சென்றோம். அது கடை சங்கத்து பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்டது.மலையில் காற்று அதிகமாக வீசியதால், உடுத்திய வேட்டி என்னைப் பிரியாதிருக்க பெரும் பாடு படவேண்டி இருந்தது. ‘உடுக்கை இழந்தவன் கைபோல ‘ என்ற வள்ளுவன் சொல் தட்டாத என் கைகளும், பட்டொளி வீசிப் பறந்த வேட்டியை கெட்டியாக பற்றிக்கொண்டன. பற்றிய கைகளை குனிந்த தலை நிமிராமல் பார்த்தபடியே நடந்தேன். சுற்றும் முற்றும் என்ன இருக்கிறது என்று பாராமல், முன்னால் சென்றவர்களை பின்தொடர்ந்து நடந்தேன்.

ஆக வெட்டுவான் கோயிலுக்கு வெகு சமீபத்தில் வந்த பின்னரே என் தலை நிமிர்ந்தேன். அந்த ஒரு நொடியை மீண்டும் வாழவியலுமெனில், எதையும் இழக்க தயாராக இருக்கிறேன். பல காலம் புத்தகங்களிலும், இணையத்திலும் படித்து வியந்த ஒரு கட்டுமானத்தை, திடீரென அண்மையில் காண என் விழிகளும், கண்டவற்றை உள்வாங்க என் மூளையும் தயாராக இல்லை. Redmi phone போல் ஸ்டால் (stall) ஆகி நின்றேன்.

கண்ணுக்கு புலனான கலைக்குவிவை, கொஞ்சங் கொஞ்சமா விளங்கிக்கொள்ள அதிக நேரம் எடுத்தது. எங்கே துவங்க? எவற்றையெல்லாம் பார்க்க? என்று ஒன்றுமே புரியவில்லை. செயலற்ற நிலைக்கு என்னை அறியாது தள்ளப்பட்டுவிட்டத்தை உணர்ந்து கொண்டேன். அதிலிருந்து வெளிவர ஒரு சிற்பத்தை தேர்ந்தெடுத்தேன். அதிலிருந்து துவங்கி அந்த கோயிலைக் காண முடிவெடுத்தேன். அது தவறான முடிவாகவே அமைந்துவிட்டது. ஏனெனில், அந்த சிற்பம் மீண்டும் என்னை செயலற்ற நிலைக்குத்தான் தள்ளியது. அப்பொழுதான் புரிந்தது, கல்லுக்கு உயிர் கொடுத்த வெட்டுவான் வினையை வியத்தல் எவ்வளவு ஆபத்தானது என்று!

ஒவ்வொரு சிற்பத்தை பார்க்கும்பொழுதும், அதைப்பற்றி பல மணிநேரம் உரையாற்றலாம், பல நூறு பக்கங்கள் எழுதலாம் என்றே தோன்றியது. இப்பொழுது எழுத விழைகையில், என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ‘உன்னை எண்ணி பார்க்கையில் கவிதை கொட்டுது ; அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது’ என்று கமல் ஹாசன் பாடுவதுபோன்ற நிலைதான்.

சிற்பங்களை செய்வதற்கென்று பல முறைகளும், முறைமைகளும் உள்ளன. அவற்றுக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன, வெட்டுவான் கோயில் சிற்பங்கள். இந்தக் கட்டுமானமே “செய்முறை நேர்த்தி” என்ற சொல்லுக்கு உருவம் கொடுத்தாற்போல் இருக்கிறது. ஏனெனில், அகழ்வுத் தொழில் நுட்பத்தைக்கொண்டு உருவாக்கப்பட்ட கட்டுமானம் இது. மலையைக் குடைந்து ஒரு பிளவை ஏற்படுத்தி, அந்தப் பிளவில் உள்ள பாறையை மேலிருந்து செதுக்கி செய்யப்பட்ட கோயில் இது. பாறையை குறைத்து, அழகை கூடியிருக்கிறார், சிற்பி. இதைக் “கலைக்குவிவு” என்று அழைத்தல் பொருத்தமானதுதான்.

இந்த காலத்தில் சக மனிதரை சிரிக்கவைக்க நிறைய செயல்கள் இருக்கின்றன. கல்லைச் சிரிக்கவைத்த சிற்பிகள் வாழ்ந்த சமூகம் இது என்று எண்ணிப்பார்ப்பதே சிரிப்பாகத்தான் இருக்கிறது. வெட்டுவான் கோயிலில் உள்ள ஆளுயர சிற்பம் ஒன்றில் தவழும் புன்னகைக்கு நிகரான முறுவல் மனிதரிடம்கூட உள்ளதா என்று தெரியவில்லை. விஷ்ணு சிற்பம் ஒன்றில், உடைகளின் மடிப்புகள் வரையில் நுணுக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பெண் ஒருத்தி உட்கார்ந்திருக்கும் சிற்பத்தில் உள்ள ஏளனமும் சோர்வும் அவ்வளவு நிஜமாக இருக்கிறது!

கையை தரையில் ஊன்றி உட்கார்ந்திருக்கும் தென்மூர்த்தி சிற்பமொன்றில் கையில் புடைத்த நரம்புகள்வரை செதுக்கப்பட்டுள்ளன. காலை பீடத்தில் ஊன்றி உடகார்த்திருக்கும் சிற்பம் ஒன்றில் முட்டியில் எலும்புகள் தெரிகின்றன. காலால் மிதிபடும் குரங்கின் விழி பிதுங்குவதுகூட நிஜமாக செதுக்கப்பட்டுள்ளது. உளியும் சிற்பியும் சேர்ந்த கூட்டணியின் வலிமையை இந்த சிற்பங்கள் உணர்த்துகின்றன.

கோயிலின் கட்டுமான அமைப்பும்கூட சிற்பங்களின் நேர்த்தியை கொண்டுள்ளது. சதுர அடியும், அறுங்கோண முடியும், இரண்டு தளங்களை கொண்டு திகழ்கிறது, விமானம். ஒவ்வொரு தளத்திலும் அலங்கரிக்கும் வடிவங்கள் (decorative motifs), ஆளுயர சிற்பங்கள், கதை சொல்லும் சிறு சிற்பங்கள், கூடு அமைப்புகள், மண்டப அமைப்புகள், தோரண சிற்பங்கள், மகர தோரணங்கள், நாசிகள், நந்திகள், வரிசை சிற்பங்கள் என்று பல்வேறு உறுப்புகளை தாங்கி நிற்கிறது இந்த வெட்டுவான் கோவில். இவை ஒவ்வொன்றையும் செய்திருக்கும் நேர்த்தியே இந்த கட்டுமானத்தின் சிறப்பு.

இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட இந்த கோயில் முற்றுப்பெறவில்லை. எதோ ஒரு காரணத்தால், அந்த சிற்பி இதை பாதியிலேயே நிறுத்திவிட்டார். கருவறையில் எந்த தெய்வ சிலையையும் வைக்கவும் இல்லை. இன்றைக்கு, வரும் மக்களுக்கு ஆறுதலாக ஒரு சின்ன பிள்ளையார் சிலை கருவறைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது.
இப்படி கலைத்திறனின் ஒன்றுகூடலாக அமைந்திருக்கும் இந்த வெட்டுவன் கோயிலை வியக்கும் வேளையில், கோயில் வளாகத்திற்குள் இருவர் வந்தனர். “என்ன மாமா இது?” என்று முதலில் வந்த பெண்மணி கேட்டாள். அதற்கு ஒன்றும் சொல்லாமல் இன்னொருவர் நடந்து வந்தார். அந்த பெண் கருவறைக்குள் சென்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வெளியே வந்தாள். “என்ன மாமா! சாமியே இல்லாத கோயிலுக்கு கூட்டியாந்திருக்க! உன்னைய நம்பி வந்தேபாரு! என்ன சொல்லணும்யா!” என்று புலம்பினாள். “அடியேய்! இந்த கோயிலு முழுக்க ஒரு கல்லுல செஞ்சதுடி!” என்று மற்றொருவர் கூறினார். அதற்கு, “அப்படியா மாமா! சரி வாங்க போவோம்.” என்று ஏளனமாக சொல்லிவிட்டு இருவரும் சென்றனர்.
அன்றாடங்களுக்கும், அற்புதங்களும் உள்ள வேறுபாட்டை அப்பொழுது உணர்ந்தேன். இங்கே என்னை யாரேனும் கூட்டிவர மாட்டார்களா என்று ஏங்கும் நான் ஒரு பக்கம், கூட்டிவந்தவரை ஏசும் அந்த பெண் ஒரு பக்கம். அன்றாடத்திலிருந்து அற்புதங்கள்வரை நீளும் வாழ்க்கையின் எல்லைகளை அந்த நொடியில் நான் கண்டேன்.