
“உன் வாழ்க்கைக்கான பொருள் என்ன? இந்த வாழ்நாளுக்கான அர்த்தம் என்ன?” என்ற கேள்விகளை எனக்குள் இருக்கும் அந்த அசரீரி என்னை பலமுறை கேட்டிருக்கிறது. நான் பதில் தேடி அலையும் பல வினாக்களுள் முக்கியமானவை இவை. இந்த கேள்விக்கு விடை தேடுவதே, என் வாழ்க்கையில் ஒரு முக்கியப் பயணம். பொதுவான பயணங்களை போல் இது வெளியே கிளம்பும் பயணம் அல்ல. உள்ளே தேடும் பயணம். உணர்ச்சிகளால் அலை ததும்பும் என் சுயம் எனும் பெருங்கடலில் மூழ்கி முத்தெடுக்கும் பயணம் இது.
ஒவ்வொரு முறையும் மூழ்கி முத்தெடுக்கும்பொழுது, கைக்கு கிடைக்கும் சிப்பி புதிதானது, தனித்துவமானது. கையில் எடுத்துப்பார்க்கையில் அந்த சிப்பி அழகாக இருக்கும். அதுனுள் இருக்கும் முத்தை பார்ப்பதற்குக்கூட ஆச்சரியமாய் இருக்கும். இருந்தும் என்ன பயன்? ஆதி ஷங்கரர் பார்வையில் இந்த படைப்பினைப்போல் இதுவும் தற்காலிகமானதே! கொஞ்ச நேரத்திலேயே அந்த சிப்பியும், முத்தும் அலுத்துவிடும். அப்புறம் என்ன? மீண்டும் ஒரு முத்துக்குளியல், புதிதாய் கையில் ஒரு சிப்பி, அதனுள்ளும் ஒரு முத்து. இந்த கேள்விகளுக்கு பதில் தேடி நான் மேற்கொள்ளும் பயணம் இவ்வாறே அமைகின்றன.
முதல்முதலில் நான் இந்த பயணம் புறப்பட்டது ஊரடங்கின் பொழுதுதான். வெளியுலகில் பயணம் செய்ய வாய்ப்பற்ற காலத்தில், வீட்டு மொட்டைமாடியில் படுத்துக்கொண்டு, மேகங்களை உலக உவமைகளோடு பொருத்திக்கொண்டிருந்த ஒரு தருணத்தில்தான, எனக்குள் உறையும் அந்த அசரீரி இந்தக் கேள்விகளை முதல்முறையாகக் கேட்டது. அன்று புறப்பட்டதுதான் இந்தப் பயணம். இன்றுவரை முடிந்தபாடில்லை. சிந்தைக்கெட்டிய தூரம்வரை முடிவொன்று இருப்பதாகவே தெரியவில்லை. முடிவை நான் நாடவும் இல்லை. ஏனெனில், முடித்துக்கொண்டு வீடுதிரும்ப இந்த பயணம் இன்னும் எனக்கு அலுக்கவில்லை. அதில் நான் திளைக்கிறேன்.
சிந்தைக்கு புலப்படுகின்ற எதிர்காலத்தில் இந்த பயணம் முடியும் என்று தோன்றாத பட்சத்தில், இதுவரை கடந்த பயணத்திற்கு சுருக்கமாக ஒரு பயணக்கட்டுரை வரையலாம் என்ற நோக்கத்தோடே இந்தக் கட்டுரையை கிறுக்குகிறேன்.
முதன்முதலில் நான் மூழ்கி எடுத்த சிப்பிக்குள் உறைந்த முத்து ஒரு பெரும் கனவு, ஒரு லட்சியப்பாதை. அதுவே என் வாழ்க்கைக்கான பொருளாக அப்பொழுது தோன்றியது. “கொரோனா ஊரடங்கு முடிந்தபின்பு என்னவெல்லாம் செய்யப்போகிறேன் பார்!” என்று அந்த கனவுப்பாதையில் என் கலத்தை செலுத்துவதுபோல் பகல்கனவுகள் கண்டேன். அந்த முத்து கைக்குக்கிடைத்த கொஞ்ச நாளிலேயே அலுத்துப்போய் அருவருப்பே வந்துவிட்டது. “சீ! சீ! இது என்ன? ஒன்றை நோக்கி ஓடுவதா? வாழ்க்கையின் பொருள் எனக்கருதி, இலட்சியத்தை நோக்கி ஓடி, அதை அடைந்தபின்பு என்ன செய்வது? அங்கேயே விழுந்து செத்துவிடுவதா?” என்றெல்லாம் சிந்தித்தேன். “வேண்டாம்! ஒரு லட்சியம் என்று வைத்தால்தானே சிக்கல்? பல லட்சியங்களாக வைத்துக்கொள்வோம்” என்று என் மனம் ஒரு மாற்று மருந்தையும் அளித்தது. ஆனால், எதையாவது நோக்கி ஓடுவது என்பதே எனக்கு பிடிக்கவில்லை. ஆக, மாற்று மருந்தையும் விழுங்க மருத்துத்துப்பிவிட்டேன்.
அடுத்ததாக என் கைக்கு கிடைத்த சிப்பியை நான் மட்டும் தனியே மூழ்கி எடுத்தேன் என்று சொல்வது பொய்யாகிவிடும். ஏனெனில், என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு முன்னால், உள்ளுறையும் இந்த அசரீரி, பலரிடமும் இந்தக் கேள்வியை கேட்டிருக்கிறது என்று தெரியவந்தது. அவர்களெல்லாம் இந்தப் பயணத்தை பலமுறை மேற்கொண்டவர்கள் என்று தெரிந்தபின்பு, அவர்களோடு உறவு பூண்டேன். ஆழ்கடலில் தனியே அலைய அச்சம்கொண்டு அவர்கள் துணையை நாடினேன். பல முறை மூழ்கி முத்தெடுத்த அந்த மனிதர்கள், அதை முத்தமிழிலும், பிற மொழிகளிலும் முத்துப்போன்ற சொற்களை தேர்ந்தெடுத்து, மாலையாய் கோர்த்த எழுத்துக்களை வாசிக்கத் துவங்கினேன்.
அவர்கள் துணை கிடைத்தபின்பு, பயணம் புதிய ஆழங்களை அடைந்தது. அங்கெல்லாம் பல சிப்பிக்கள், பல முத்துக்கள். புதிதுபுதிதாய்! இதுபோல் பல சிப்பிகளை கையில் எடுத்து, முத்துக்களை ஆராய்ந்து, ஆச்சரியப்பட்டு, அலுப்புக்கொண்டு, அருவத்து,அதை தூரவீசுவதும் வழக்கமாகிப் போனது.
சமீபத்தில் நான் தூர எறிந்த சிப்பி, அந்தத்தில் நின்றபடி பொருள் தேடும் ஒரு வழிமுறை. அதாவது, வாழ்க்கைக்கான பொருளை, சாகும் நொடியில் நின்றுகொண்டு விளங்கிக்கொள்வது. இன்று என் வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகளுக்கு சாகும் நொடியில் நின்று பார்த்து, அதற்கான பொருளையும், என் வாழ்க்கையில் அதற்கான மதிப்பையும் நான் ஆராயும் ஒரு வழிமுறையைக் கொண்டிருந்தேன். “இன்று நிகழும் நிகழ்வுகளுக்கு, என்றோ ஒரு நாளில் நின்றுகொண்டு, பொருள் தேடுவதா?” என்ற எண்ணம் தோன்றியது. இன்று நேரும் நேர்வுகளை நிகழ்காலத்தில் நிலையாய் நின்றபடி அனுபவித்து, திளைக்கும் மனப்பக்குவத்தை இந்த வழிமுறை பறித்துக்கொள்வதாகத் தோன்றியது. ஆக, இந்த முத்தும், அலுத்து, அருவருத்துப்போய் விட்டது.
மீண்டும் சுயம் எனும் பெருங்கடலில் தேடலுற்றேன். முதலில், மேல்கடலில், உணர்ச்சி அலைகளில் ததும்பிக்கொண்டிருந்தேன். பிறகு, ஆழ்கடலை நோக்கி மூழ்கினேன். இந்த முறை எனக்கு சகப்பயணிகளாக அமைந்தவர்கள், என்றோ எங்கோ இருக்கும் எழுத்தாளர்கள் அல்ல. அக உலகில் என் சுயத்திற்கும், புற உலகில் காலத்திலும், தூரத்திலும் எனக்கு நெருக்கமானவர்கள், என் நண்பர்கள். எழுத்தாளர்களை துணையாகக் கொண்டு இந்த பயணத்தை மேற்கொண்டால், அவர்களை பின்தொடரத்தான் முடியும். ஆனால், நண்பர்களோடும், சகச் சிந்தனையாளர்களோடும் பயணிக்கையில், நம் கையைப் பிடித்து ஆழத்திற்கு கொண்டுவந்துவிடுவார்கள். இந்த நியதிக்கு நானும் விதிவிலக்கு இல்லை!
இம்முறை கிடைத்த முத்தைப்பற்றி சிந்திக்கையில், சமீபத்தில் பார்த்த ஒரு பேட்டியே நினைவுக்கு வருகிறது. உலகநாயகன் கமல் ஹாசனுக்கும், அவர் மகள் ஷ்ருதி ஹாசனுக்குமான ஒரு உரையாடலை நான் இணையதளத்தில் கண்டேன். அதில் ஷ்ருதி ஹாசன் “உங்கள் வாழ்க்கையில் நிறைவேறாத கனவுகள் இருக்கிறதா?” என்று கமலிடம் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பெரிய பதிலை நான் சுருக்கிப் புரிந்துகொண்டது: - என் வாழ்க்கையில் அதுபோல் பல நிறைவேறா கனவுகளும், ஆசைகளும் உள்ளன. அவற்றை பட்டியல் போட நான் விரும்பவில்லை. தற்சமயம் என் வாழ்க்கையின் கனவு என்பது பிடித்தவற்றை செய்வது. I am happy in keeping myself happy. அதற்குமேல் பெரிய கனவுகள் ஒன்றும் இல்லை." என்றார் கமல் ஹாசன்
அவர் பேச்சுக்களை கேட்டவர்களுக்குத் தெரியும், அவர் இதுபோல் சுருக்கமான பதில்களை அளிக்கும் வழக்கத்தை பின்பற்றுவதே இல்லை. அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த பல நிகழ்வுகளை சொல்லி, அதிலெல்லாம் அவர் கற்றவற்றைச் சொல்லி, கடைசியில்தான் இந்த ஆங்கில வரியைச் சொல்லி முடித்தார். அவர் வழியை பின்பற்றி நானும் என் வாழ்க்கையில், சமீபத்தில் நிகழ்ந்த இரு நிகழ்வுகளைப்பற்றிச் சொல்லி, என் பதிலை நிறுவ விழைகிறேன்.
முதல் நிகழ்வு நிகழ்ந்த சூழல், நள்ளிரவு இரண்டரை மணி, அண்ணாமலையானாய், அக்கினி லிங்கமாய் வீற்றிருக்கும் சிவபெருமானையும், அவர் துணைவியையும் காண பல லட்சம் பக்தர்கள் கூடும் திருவண்ணாமலை. ஐவர் படையாக, இரண்டு பைக்குகளில், நள்ளிரவின் குளிர்காற்றை கிழித்துக்கொண்டு ஒரு ஏரியை வந்தடைந்தோம். கோடையில் காய்ந்துபோன அந்த ஏரியின் நடுவில் இருந்த ஒரு பெரிய பாறையில் ஏறினோம். அந்த வேளையில், அங்கு நாங்கள் சென்றது, star watching செய்வதற்கும், astrophotography பயிலுவதற்கும்தான்.
பாறையில் படுத்தவண்ணம் அண்ணாந்துப்பார்த்தேன், பிரபஞ்சமே தெரிந்தது கண்முன்னால்! “The darkest nights produce the brightest stars” என்று ஒரு வாசகம் உண்டு. அது அன்றும் நிரூபணம் ஆனது. தூரத்தில் திருவண்ணாமலை தெரிந்தது. இந்தப்பக்கம் திரும்பிப்பார்த்தால், ஏரியின் ஒரு கரையில், ஒரு சின்னக் குன்றின்மேல், ஒரு கோயில் ஒன்று இருப்பதை ஒற்றை மின்விளக்கு தெரியப்படுத்தியது. இந்தக் காட்சியைக் கண்டவுடன், என் மனம் எண்ண அலைகளில் மிதந்தது. “என் கண்முன் தெரிகின்ற வானமும், அதன் அணிகலன்களாய் விளங்கும் பல கோடி நட்சத்திரங்களும் படைப்பு எனும் பெருஞ்செயலின் விளைவு. அந்த பெருஞ்செயலையும், அதன் விளைவுகளையும் புரிந்துக்கொள்ள இயலாத மனித மூளை உருவாக்கிய கடவுளும், இந்தக் காட்சியின் ஒரு மூலையில்தான் அமர்ந்திருக்கிறார்!" என்ற எண்ணம் என்னை பூரிக்கச் செய்தது!
இரண்டாவது நேர்வு நிகழ்ந்த சூழல், இரவு எட்டு மணி, கொடைக்கானலிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில், நிலமகளுக்கும் வானத்திற்கும் மேகத்திற்கும் உள்ளே இருக்கும் ஊர், பூம்பாறை எனும் அழகிய மலை கிராமம். போகர் எனும் சித்தர் செய்ததாகச் சொல்லும் ஒரு முருகர் சிலையை கொண்டு விளங்கும் ஒரு சின்னக்கோயிலுக்காக பேர்போன ஊர் அது. ஆனால், நாங்கள் அங்கு வந்தது முருகப்பெருமானை பார்ப்பதற்கு மட்டுமல்ல, அந்த ஊருக்கே பெயர்போன பூண்டை வாங்கவும்தான். முருகப்பெருமான் காட்சிதர மறுத்தார். ஆனால், பூண்டுக் கடை அண்ணனோ பை நிறைய அள்ளிக்கொடுத்தார்.
என்னையும், இரு நண்பர்களையும் ஒரு swift கார்தான் அங்கு சுமந்து வந்தது. வந்த வேலை முடிந்தபின்பு மீண்டும் வந்த பாதையில் திரும்பிப் பயணம். கொடைக்கானலுக்கும், பூம்பாறைக்கும் இடையிலான சாலைவழி, காட்டெருதும், யானைகளும் வலம் வரும் ஒரு அடர்ந்த காட்டை கிழித்துப் போடப்பட்டது. அந்த சமயத்தில், எங்கள் காரைத் தவிர ஒரு வண்டியும் அங்கு இல்ல. மனித நடமாட்டத்திற்கான ஒரு அறிகுறியும் இல்லை. எங்கள் காரின் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, சில நிமிடங்கள் ஓரமாக நிற்கலாம் என்று தீர்மானித்தோம். அவ்வாறே செய்து விட்டு பார்த்தால், நான் அஞ்சிய அளவிற்கு அந்தக் காட்சி இருட்டாக இல்லை. மாறாக, ஓரளவுக்கு ஒளிமயமாகவே திகழ்ந்தது. இது என்ன வெளிச்சம் என்று திரும்பிப் பார்த்தேன், எதுவும் புலப்படவில்லை. கார் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி அண்ணாந்து பார்த்தேன்! அப்பப்பா! அந்தக் காட்சி என் கண் முன்னால் அப்படியே இருக்கிறது.
வெண்ணிலா புடை சூழ, பல கோடி நட்சத்திரங்கள், இந்த பூமிப்பந்தையும், அதில் வாழும் சிற்றுயிர் கூட்டத்துள் சிறுதுகளான என்னையும் உற்றுப்பார்த்தன. பேரண்டமே கண்ணுக்கெட்டியதுபோல் இருந்தது. உடலெல்லாம் புல்லரித்தது!
இந்த இரு நிகழ்வுகளுமே, சமீபத்தில் என் புற உலகப் பயணமும், அக உலகப் பயணமும் சந்தித்துக்கொண்ட தருணங்கள். “Outward enactment of an inward journey ; internal reaction to an external stimuli” என இரண்டு தனித்துவமான செயல்பாடுகள் ஒருசேர நிகழ்ந்த தருணங்கள் அவை.
இந்த இரு நிகழ்வுகளிலும் என்னுடன் வந்த மனிதர்கள் எனக்கு நெருக்கமான நண்பர்கள். பொதுவான புற உலகில் “பாதுகாப்பு” என்ற உணர்வை அதிகம் வழங்கும் மனிதர்கள். என் அக உலகில் சகச் சிந்தனையாளர்கள். அவர்கள் துணையோடு மேற்கொண்ட பயணங்கள் இது போன்ற புதிய ஆழத்தை எட்டுவது எனக்கு பூரிப்பையே ஏற்படுத்தியது.
இந்த இரு சூழல்களிலும், புறக் காரணிகளாலும், அகத் தூண்டல்களாலும் ஏற்பட்ட உணர்ச்சிப் பொங்கல்களில்தான் நான் மிதந்துகொண்டு இருந்தேன். அச்சம், சோகம், மகிழ்ச்சி, துயரம், தனிமை, வேதனை, வெறுப்பு, பெருமை, பொறாமை என பல அலைகள் என்னை மோதின. ஆனால், இவ்விரு தருணங்களிலும் என்னால் அந்த மேல் மட்டத்தைக் கடந்து, அதிகம் ததும்பாத ஆழத்தில் இருக்கும் இன்பத்தை உணர முடிந்தது. அது ஒரு அலாதியான இன்பம், ஆழமான இன்பம்! அது உணர்ச்சிகள் இல்லாத நிலையல்ல ; அதற்கு அப்பாற்பட்டது, அது நம்மை கொண்டு சேர்ப்பது.
இந்த இன்பம் எப்பொழுதும் வாய்த்துவிடுவதில்லை. இது இந்த நொடி, இந்த நேர்வு, இந்த அனுபவம் என்று நிகழ்காலத்தின் ஆழத்தில், இருத்தல் எனும் உன்னதத்தின் ஆழத்தில், அகத்தின் ஆழத்தில், புறத்தின் பெருவெளியில் நம்மையே உணரும் ஒரு தருணம். அது அலாதியானதுதான்! அது அன்றாட வாழ்க்கையில், என்றாவது வாய்த்திடும் அற்புதம். அந்த நொடியில் அது பேரின்பம் போல் தோன்றினாலும், வாழ்க்கையின் பார்வையிலிருந்து அவை சிற்றின்பங்கள்தான்.
இதுபோல் பல சிற்றின்பங்களின் தொகுப்பே என் வாழ்க்கை என்று சொல்லத் தோன்றுகிறது. இந்தக் கட்டுரையை ஒரேடியாக எழுதி முடித்த இந்த ஐந்து மணிநேரத்தில்கூட அது போன்ற இன்பத்தையே நான் உணருகிறேன். ஆக, என் வாழ்க்கை எனும் பெருங்கதைக்கு இன்பம் என்பதே பொருள் சுருக்கம் என்று சொல்லத் தோன்றுகிறது!
ஆனால், இதுவும் தற்காலிகமே! இந்த முத்தும் ஒரு நாள் அலுத்துப்போகும். அடுத்த சிப்பிக்கான தேடலுக்கு அது வழிவகுக்கும். அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.
நன்றி!