Skip to main content

Off-script

Pallavaram Hills
Artwork: Neeraj Bharadwaaj

அன்பின் அடைசலில் எழுந்த பெருமூச்சாய் புறப்பட்டான். இதுவரை இப்படி நாற்காலியிலிருந்து குதித்தபோதெல்லாம், “இன்று பேசி ஒரு முடிவு கட்டிவிடலாம்!” என்றே எண்ணியவன், இன்று அவ்வாறு யோசிக்கவில்லை. “பேசி ஆரம்பிக்கலாம்” என்பதைத் தவிர வேறு எந்த முன்முடிவும் அவன் நாவை இன்று நசுக்காது என்று நம்பியே கிளம்பினான்.

“Conclusionsலாம் இல்லாம பேசுங்க. அப்போதான்டா அது conversation. இல்லனா அது வெறும் நாடக rehearsalதான். Off script போய்ட கூடாதுன்னே பேசிட்டிருப்போம். அதுக்கு scriptஅ முதல்லயே ஓரம் தூக்கி வெச்சுட்டா சிக்கலே இல்ல பாரு” என்றெல்லாம் பலருக்கும் ஞானோபதேசம் செய்வதை வழக்கமாகக் கொண்ட அவனுக்கு, இது எதுவும் அவளோடு சாத்தியப்படவில்லை என்பது அவன் தூக்கி வளர்த்த துயரம் என்றே சொல்லலாம்.

அணுகுமுறை மாற்றத்தில் அதீத நம்பிக்கை கொண்டவன் அவன். வாழ்க்கையில் சிக்கல்கள் எழும்போதெல்லாம் அதற்கு தீர்வு தேடிச்செல்லும் மனிதர்களுக்கு மத்தியில், அந்த சிக்கலை அணுக ஒரு புதிய பார்வையை தேடும் கிறுக்கன் என்று கூட சொல்லலாம். அவன் வாழ்க்கையின் பல சோகங்களை இந்த காட்சி மாயைக் கொண்டு ஏமாற்றி இருக்கிறான். மாறும் கோங்ணகளுக்கு ஏற்ப தெரியும் காட்சிகளுக்கு அப்பால் என்ன இருக்கக்கூடும் என்ற கேள்வியே அவனை அச்சுறுத்தவல்லது.

“Maybe the truth is forever disguised to the human eye” என்று அவன் வாசித்து கீழே வைத்திருந்த புத்தகத்தின் ஒற்றை வரி அவனுக்கு அந்த பயத்தை நினைவு படுத்தியது. வழக்கம்போல் ‘தெரியாது’ என்ற ஒற்றைச் சொல்லில் அடைக்கலம் புகுந்தான்.

“நீயம் அவள எத்தன தடவ புரிஞ்சிக்க try பண்ணிருக்க. புரிஞ்சுக்கிட்டேன்னு நெனச்சிருக்க. இது எதுவும் அந்த உறவுல இருக்கற சிக்கல தீத்துடலியே. உன் புரிதலுக்கெல்லாம் அப்பாலதான் அவ இருக்கா. அங்க அவ யாருன்னு உனக்கு தெரியாது. ஏன், அவளுக்கே தெரியாது. யாருக்கும் தெரியாது. அத ஓத்துக்கோ. இப்படித்தான் அப்டித்தான்னு சொல்லிட்டு அந்த உறவுல இருக்கறதுக்கு, தெரியாதுன்னு சொல்லிட்டு போயேன்” என்றெல்லாம் அவன் வாசித்த ஒரு வரி அவன் சிந்தனையை சிதறவிட்டது.

அவன் எதிர்பார்த்து காத்திருந்த அணுகுமுறை மாற்றம் இதுதான் என்று விக்ரமாதித்தன் கதையாய் பக்கத்து அறைக்கு சென்றான். வீட்டின் ஒரு அறைக்கும் மற்றொரு அறைக்கும் இடையில் எத்தனை தூரம் இருந்துவிட முடியும்? இந்த வீட்டில் ஒரு பிளவே இருந்தது. அவன் பார்த்து வளர்ந்தப் பிளவு.

ஆழத் துயரத்தில் அனுதினம் கழிப்பவளாய் நாற்காலியில் அவள் உட்கார்ந்திருந்தாள். அவளது சின்ன விரல்கள் computer keyboardல் அதிவேகமாக தாளம் இசைத்துக் கொண்டிருந்தது.

“ஏம்மா! வேலையா இருக்கியா?” என்று அவளைச் சூழ்ந்த நிசப்த்தத்தின் ஓலத்தை சிறிது நேரம் தள்ளி வைத்தான். “என்ன வேணும்?” என்று அவள் குரல் முணுமுணுத்தது. “நா பொறந்த கதையை கொஞ்சம் சொல்லேன். எங்க, எப்படி, நீ அப்போ எப்படி இருந்த, என்ன feel பண்ண, சொல்லேன்” என்றான். “என்ன திடீர்னு?” என்ற அவள் குரலில் அருவெறுப்பும், ஆர்வமும், இவை இரண்டிற்கும் இடையில் சிக்கிய அன்பும் தொனித்தது. “எனக்கும் வேல இல்ல, உனக்கும் வேல இல்ல. சும்மா கத பேசலாமேன்னுதான் கேட்டேன். வயசு பைய்யனுக்கேத்த மாதிரி இருக்கட்டும்னுதான் இத பத்தி கேட்டேன்” என்றபடியே ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தான். “நீதான் வெட்டிப்பய. எனக்கு நெறையா வேல இருக்கு” என்று சொன்னபடியே நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தாள். “சரி சரி! சொல்லு” என்றபடியே, அருகில் ஒரு மேசைமேல் உட்கார்ந்து கொண்டான்.

“உன் Date of birthஅ வெச்சு நீதான் கணக்கு போட்ருப்பியே, எங்க, எப்டினெல்லாம். அப்பறம் என்ன கேள்வி?” என்று அவள் மகனின் வாலிபத் துடிப்பிற்கு ஈடுகொடுக்க முயன்றாள். “கணக்கெல்லாம் போட்டேன், ஆனா, mathsல நா கொஞ்சம் weakனு உனக்கே தெரியும். அதான் போட்ட கணக்க சரி பாத்துக்க” என்றான். “தேவையில்லாத இந்த கணக்கெல்லாம் நீ செரியாதான் போட்டுருப்ப. அதான். அதுலேந்து பத்து மாசத்துல நீ பொறந்த…” “நிறுத்து நிறுத்து. கதைல ஓடாத” என்று அவள் ஓட்டத்தை துண்டித்தான். “நீ கொழந்த பெத்துக்க தயாரா இருந்தியா?” என்றான்.

“இது என்ன கேள்வி, வேற எதுக்கு கல்யாணம் பண்ணுவாங்க? அத தவிர, உனக்கு முன்னாடியேதான் இன்னொன்னு… அந்த கதையெல்லாம் உனக்கு தெரியுமே” என்ற அவள் முகத்தில் ஒரு கசப்பு படர்ந்தது. “அதெல்லாம் எனக்கு தெரியும். ஆனா, என்ன பெத்துக்கறப்போ நீ தயாரா இருந்தியா? பெத்துக்கணும்னு முடிவு பண்ணித்தான் பெத்துக்கிட்டிங்களா?” “உங்க அப்பாவுக்கு அப்போலேந்தே என்ன எதுவும் கேட்டுட்டு செய்யுற வழக்கம் கிடையாது, என்ன உட்பட” என்று ஒரு இனம் தெரியாத புன்னகை அவள் முகத்தில் படர்ந்தது. “எங்கம்மா வாய திறந்தாலே இலக்கியமா பொழியும்” என்று முன்தினம் அவன் நண்பனிடம் சொல்லி நகைத்தது அவன் நினைவிற்குவந்தது. அவனும் புன்னகைத்தான்.

“ஆனா, உனக்கு எப்போ மொத மொதல்ல கொழந்த பெத்துக்கணும்னு தோணுச்சு?” என்று கேட்டான். “ரொம்ப சின்ன வயசுலேர்ந்தே. நா பொறக்கறப்போவே எனக்கு பொறக்கபோறத நெனச்சுக்குட்டே பொறந்தேன்னு சொல்லிப்பேன்” என்று சிரித்தபடியே பதில் சொன்னாள்.

“ஏய்! இது ரொம்ப overஆ இருக்கு!”

“சேரி, அவ்ளோ சின்ன வயசெல்லாம் இல்ல. முதல்ல கொழந்த ஆசையெல்லாம் வரல. கல்யாணம் பண்ணிக்கனும்னுதான் ஆசபட்டேன். சின்ன வயசுல வீட்ல எல்லா cousinsஉம் சேந்து யார் கல்யாணத்துக்காச்சு ஊருக்கு போவோம். அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி, அத்த, பெரியம்மா, அவங்க பசங்க, எல்லாரும் வருவாங்க. அந்த ரெண்டு, மூனு நாள் ரொம்ப jollyஆ இருக்கும். அப்போ, மேடைல மாப்ள பொண்ணு நிக்கறத பாத்தப்போ, நலங்கு விளையாடி பாத்தப்போ, ஊஞ்சல், இதெல்லாம் பாத்தப்போ கல்யாணம் பண்ணிக்கணும்னுதான் முதல்ல ஆச வந்தது” என்றாள்.

“அந்த attentionக்கு ஆச பட்டியா?” என்று ஆர்வத்துடன் கேட்டான்.

“ம்ம்ம்…attentionனு சொல்லிட முடியாது. அந்த மாதிரி கல்யாணத்தபோ வீட்டு மனுஷங்க எல்லாரும் சந்தோஷமா இருப்பாங்க. சீட்டு ஆடுவாங்க. எல்லோரும் ஒரே தரைல ஒரு பெரிய ஜமகாலத்துல படுத்துப்போம், gamesலாம் நிறைய விளையாடுவோம். பெரியப்பா mimicry performanceலாம் பண்ணுவா. எல்லாரும் சிரிப்போம், கைதட்டுவோம். யாரோ ரெண்டு மனுஷங்க வாழ்க்கைல நடக்கற ஒரு விஷயம் இப்படி எல்லாரையும் சந்தோஷ படுத்துதுல்ல. அது என் வாழ்கைலையும் நடக்கணும்னு ஆசபட்டேன். அவ்ளோதான்” என்றாள்.

“அப்றம் அந்த ஆசைக்கு என்ன ஆச்சு?”

“அப்றம், எனக்கு மொத மொதல்ல periods வந்துச்சு. அப்போலேர்ந்தே அடுத்து கலியாணம்தான்னு எல்லாரும் முணுமுணுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அங்கேயே அது ஒருநாள் சந்தோஷந்தான்னு தெரிஞ்சிடுச்சு. கல்யாணம் முடிஞ்சவங்களுக்கும் அதுக்கு அப்றம் வாழ்க சாதாரணமாத்தான் இருந்துச்சு. ஒரு கட்டத்துல, கொழந்த பெத்துக்க கலயாணம்தான் ஒரே வழீன்னு தெரிஞ்சப்போ வேற வழி இல்லன்னு ஆச்சு” என்றாள்.

“இதுல கொழந்த ஆச எப்போ வந்துச்சு?”

“அது எப்போமே இருந்துருக்கு. என் வாழ்க்கைல எனக்குன்னு ஒண்ணுன்னா அது என் பைய்யன்தான்னு நினைப்பேன்”

“பையன்னு முடிவே பண்ணிட்டியா?”

“ஆம்” என்று அவள் முகத்தில் படர்ந்த முறுவல் பதில் சொன்னது.

“அப்றமா அந்த பைய்யனுக்கு என்ன ஆச்சு?”

“அவனும் என் கூடையை வளந்தான். அவன எப்படி வளக்கணும்னு நா நேரிய planலாம் போடுவேன். மாசம் மாசம் periods வரப்போ பயங்கரமா வலிக்கும், மயக்கமே வரும். ஆனா, அதுக்கு medicines எடுத்துக்கிட்டா child birthஅ பாதிக்கும்னு சொல்லி மருந்து கூட எடுத்துக்கல. இப்படித்தான் அவன நான் வளக்க ஆரம்பிச்சேன். என்ன அவனுக்காகவே மாத்திக்கிட்டேன். அவன tennis player ஆக்கணும்னு நெனச்சேன். நீயும் இருக்கியே, போரகர்த்துக்கே சோம்பேறித்தனம், இதுல tennis வேற” என்று அவனிடம் சொன்னாள்.

“சேரி சேரி” என்று கனைத்துக் கொண்டான்.

“அப்றம் என்ன, நீ பொறந்த. படாத பாடு படுத்தி வளைந்த. இப்போ எருமமாடு மாதிரி என் முன்னாடி உக்காந்துருக்க” என்று சட்டென்று கதையை முடித்தாள்.

“நா பொறந்தப்போ உனக்கு எப்படி இருந்துச்சு? நீ ஆசைப்பட்ட பைய்யன் கெடச்சுட்டான்னு சந்தூஷ பட்டியா?” என்று கேட்டான்.

“அப்போ ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு. உன்ன கைல தூக்கி கொடுத்தப்போ இருந்த சநதோஷமெல்லாம் மறக்கவே முடியாது. ஆனா, உடனே உன்ன பங்கு கேட்டு நெறய பேரு வந்துட்டாங்க. உங்க அப்பா, பாட்டி. உன்ன தூக்கி வெச்சு கொஞ்சுனாங்க. மணி கணக்கா விளையாடுவாங்க. பால் குடுக்கணும்னா மட்டும் திரும்ப தருவாங்க. அப்பெல்லாம் நீ என் பைய்யன் இல்லையான்னு தோணும்” என்று ஒரு பெருமூச்சு புறப்பட்டது.

“இதெல்லாம் சொல்லி புரியுமான்னு தெரியல” என்று அவள் குரல் சற்று வறண்டது.

“நீ சொல்லு! புரியுதான்னு நா சொல்றேன்” என்று அவள் கண்களைப் பார்த்தபடியே கேட்டான்.

“எனக்குன்னு ஒரு பைய்யன் வேணும்னு ஆச பட்டேன். ஆனா, நீ நெறய பேருக்கு நெறய விஷயங்களா இருந்த. என் பேரன், என் மகன்னு உன்ன தூக்கி வச்சுக்கிட்டாங்க. நீ உங்க அப்பாக்கும் புள்ளன்னே என்னால ஏத்துக்க முடில. நீ வளர பாக்கும்போதெல்லாம் இருந்த சந்தோஷத்த மத்தவங்களுக்கு பங்கு தராம அனுபவிக்க முடியலன்னு ஒரு வருத்தம். அதுவே அப்போ பல சண்டைக்கு காரணம். உன்னோட ஒவ்வொரு milestoneலயும் எனக்கு ஒரு bitterஆனா memory இருக்கு” என்றாள்.

கொஞ்ச நேரமாய் விலகி இருந்த நிசப்தத்தின் ஓலம் மீண்டும் கேட்டது.

“உன்ன என்கிட்டேந்து விலக்கின எதையும், யாரையும் என்னால பொறுத்துக்க முடில. அந்த கோவத்தையும் உன் மேல காட்டினேன். எனக்கு ரொம்ப புடிச்ச விஷயத்த என்கேட்டேந்து விலக்கினவங்க பேர்ல இருந்த கோவத்த அது மேலேயே காட்டின guilt வேற. இது எல்லாம் சேந்து நா ஒரு வழி ஆகிட்டேன்!” என்றபோது அவள் கண்கள் முடிந்தவரை தன்னுள்ளே பார்ப்பதுபோல் அந்தரத்தில் எதையோ பார்த்தன.

“இது எதுவும் நா ஆசபட்ட மகன் வாழ்க்கைல இல்லையே” என்று நடுவில் படர்ந்த மௌனத்தை உடைத்தாள்.

அவள் மகனுக்கும் தனக்கும் உள்ள இடைவெளியை முதன்முறை அவன் கண்டான். ஒன்று rehearsed, மற்றொன்று off script.

இதில் எது நல்ல நாடகம்?

Neeraj Bharadwaaj
Author
Neeraj Bharadwaaj
Unapologetically curious