Skip to main content

குளத்து பூதத்து சுயசரிதம்

அந்த ஊரில் ஒரு குளமுண்டு. வட்ட வடிவக் குளமது. கரையெங்கும் பெருமரங்களும் புதர்களும் வளர்ந்து குளிர்ச்சியான நிழல் பரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த புதர்களை ஆங்காங்கே கால்கள் பதித்த பாதைகள் கிழித்தன. கரையைப் போர்த்திய பச்சையும் குளத்துப் பாசியும் அந்தக் காட்சியில் அடர்த்தியான வர்ணங்களை வெளிப்படுத்தின. கரையோரம் ஒரு படித்துறையும் இருந்தது. அந்த வட்டக் குளத்தின் மையத்தில் சுழலொன்று இருந்தது. அதை ஊர் மக்கள் “குளத்து பூதம்” என்று அழைப்பர். அந்த பூதத்தால் விழுங்கப்படுபவை நேரே பாதாளலோகத்திற்கு சென்றுவிடுவதாக அதைப்பற்றி கதைகள் சொல்லுவர். பாதாள லோகத்தில் எப்பொழுதெல்லாம் ஆட்களோ பொருட்களோ தேவைப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் பூதம் எவற்றையாவது வாய்திறந்து விழுங்கிக்கொள்ளும் என்று நம்பினர். ஆகையால், ஆண்டுக்கு இருமுறை அந்த பூதத்திற்கு விழா எடுத்து, பாதாளலோகத்திற்கு தேவையான பொருட்களை அதில் வீசும் வழக்கம் உண்டு. பூதத்திருவிழா என்றால் வட்டாரமே கூடிவிடும்.

சின்னஞ்சிறுசுகளில் துவங்கி கிழங்கட்டை வரை ஊரே கூடி, காய்கள், பழங்கள், தேன் தட்டுகள், தானியங்கள், தின்பண்டங்கள், ஒரு பனை பரிசல், மரத்தால் செய்யப்பட்ட மனித உடல்கள் என ஏராளமான பொருட்களை அந்த சுழலில் வீசுவர். இத்தனை ஆண்டு காலமாய் இவையனைத்தையும் விழுங்கி செரித்து வளர்ந்துகொண்டிருக்கிறது அந்த பூதம்.

பூதத்திருவிழா நடைபெறும் இரண்டு நாட்கள் குளமே கோலாகலமாய் காணப்படும். மற்றபடி, ஆண்டு முழுவதும் வெறிச்சோடியே இருக்கும். சுழல் இருக்கும் பயத்தினால் ஊர் மக்கள் அந்த குளத்தை பெரிதாக பயன்படுத்துவதில்லை. அவ்வப்பொழுது சிலர் மாலை வேளைகளில் கரையில் அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்ப்பதுண்டு. கல் எறிந்து விளையாடும் சிறுவர்களும், அவர்களைக் கண்டால் அதட்டும் பெரியவர்களும் உண்டு. இவர்களைத் தவிர, அங்கே மீன் பிடிக்கும் மூன்று பரிசல்காரர்களே அந்தக் குளத்தின் உறவுகள்.

அந்தக் குளத்தில் மீன் பிடிப்பது அத்தனை சாதாரணமான காரியம் அல்ல. வழக்கமான மீன்பிடி முறைகளெல்லாம் அங்கு வேலைக்கு ஆகாது. பெரிய மீன்களெல்லாம் ஆழத்தில்தான் மேயும். ஆனால், ஆழத்திற்குச் சென்றால் சுழலில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உண்டு. இதனால், பரிசல்காரர்கள் சுழலிலிருந்து தங்களால் இயன்ற தூரத்தில் பரிசல்களை செலுத்திக்கொண்டு தூண்டில் போட்டும் வலை போட்டும் மீன்கள் பிடிப்பர். இது ஒரு ஆள் செய்யும் காரியம் அல்ல. ஆகையினால், தினம் காலை அந்த மூன்று பரிசல்காரர்களும் கரையில் தங்கள் பரிசல்களை வைத்துக்கொண்டு உதவியாள் வேண்டி காத்திருப்பர். அன்றைக்கு அமையும் உதவியாளனோடு தனக்கிருக்கும் ஒத்திசைவே பரிசல்காரனின் அதிர்ஷ்டம். நல்ல துணை அமைந்தால் ஆழத்திற்கு சென்று பெரிய மீன்களைப் பிடிக்கலாம். இல்லையேல், கரையோரமே மிதந்துகொண்டு குஞ்சுகள் பொறுக்கிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

அப்படி ஒரு நாள், அந்த மூன்று பரிசல்காரர்களும் கரையில் தங்கள் பரிசல்களை வைத்துக்கொண்டு காத்திருந்தார்கள். முதலில் ஒரு பெண் வந்தாள். கூந்தலை இழுத்து முடிந்துகொண்டே விரைந்து நடந்துவந்தாள். “ஏன்பா! சீக்கிரம் விடு பரிசல. வீட்டுக்கு கொழம்பு வெக்கணும். புடிக்கிறதுல அர பங்கு தரணும். என்ன, சரியா?”, என்று ஒரு பரிசல்காரனை பார்த்து கூவியபடியே துடுப்பை கையில் எடுத்தாள். பரிசல்காரனும் ஆர்வமாய் எழுந்தான். படித்துறையில் கவிழ்ந்திருந்த பரிசலை நிமிர்த்தி நீரில் தள்ளினான். அந்த பெண்ணும் அதில் விரைந்து ஏறிக்கொண்டு துடுப்பு வலிக்கத் துவங்கினாள். அவள் துடுப்பு வலித்த வேகத்தில் பரிசல் சற்று ஆட்டங்கண்டது. அது அவளை அச்சப்படுத்தியது. பரிசல்காரன் தன் துடுப்பை எடுத்து வருவதற்குள் அவள் அச்சம் பெரிதும் வளர்ந்திருந்தது. சற்று தூரத்தில், குளத்தின் மையத்தில் இருந்த சுழலின் பூதாகாரமான தோற்றம் அவள் கண்ணில் பட்டது. அதைக் கண்டவுடன் அவள் அச்சம் பதற்றமாக மாறியது. இதனால் இன்னும் வேகமாக துடுப்பு வலித்தாள். பரிசல் ஒரே இடத்திலேயே வேகமாகச் சுழலத் துவங்கியது. இதைக் கண்ட பரிசல்காரன் சட்டென்று தாவி பரிசலில் ஏறிக்கொண்டான். “யம்மா! நிறுத்து மா! யம்மா! உன்னத்தான்! நிறுத்துமா! துடுப்பு வலிக்காத!”, என்று கூவினான். இது எதுவும் அந்தப் பெண்ணின் காதில் விழவே இல்லை.

அதிவேகமாக சுழன்று கொண்டிருந்த பரிசல் மெல்ல மெல்ல சுழலை நோக்கியும் நகரத் துவங்கியது. அதைப் பார்த்த அந்தப் பெண்ணின் பதற்றம் இன்னும் கூடியது. தான் எதற்கு எதிராக அத்தனை முயற்சிகளையும் செய்கிறாளோ அதுவே அங்கு நிகழ்வதைக் காண்பது அச்சங்கலந்த ஏமாற்றத்தையே அளித்தது. அது அவள் உடல் வலிமையை பெரிதும் குறைத்தது. ஒரு கட்டத்தில், சுழலுக்கு சற்று அருகே பரிசல் வந்துவிட்டது என்பதைக் கண்டவுடன் “ஓ!”, என்று கூச்சலிட்டபடியே தன் துடுப்பை தூர எறிந்தாள். வியர்வையால் நனைந்த அவள் முகத்தை கால் முட்டிக்கு இடையில் புதைத்துக்கொண்டு கூச்சலிட்டுக்கொண்டே அழத் துவங்கினாள். துடுப்போ சுழலுக்கே போய் விழுந்தது. சுழலும் அதை விழுங்கிக்கொண்டது.

அந்தப் பெண் துடுப்பு வலிப்பதை நிறுத்தியவுடனேயே பரிசல்காரன் விரைந்து செயல்படத் துவங்கினான். பரிசலின் சுழற்சியைத் திறமையாகக் கட்டுப்படுத்தி, அதை படித்துறைக்கு கொண்டு சேர்த்தான். நன்கு பயந்திருந்த அந்தப் பெண்ணுக்கு ஒரு கை கொடுத்து கரையேற்றினான். இது அனைத்தையும் கரையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த மற்ற இரு பரிசல்காரர்களிடம் அவளை ஒப்படைத்துவிட்டு, குடிக்க நீர் கொண்டு வந்தான். அந்த நீரை மடக் மடக் என்று குடித்துவிட்டு அந்தப் பெண் பெருமூச்சு விட்டபடியே தரையில் உட்கார்ந்தாள். படித்துறை அருகே இருந்த ஈரச் சாக்கில் நேற்று மாலை பிடித்த மீன்களிலிருந்து இரண்டை எடுத்து பரிசல்காரன் அந்தப் பெண்ணிடம் கொடுத்தான். “அவ்வளவு பதட்டமா உனக்கு! இந்தா! இந்த மீன பிடி. இது வச்சு கொழம்பு வை!”, என்று சொன்னான். அவளும் அந்த மீன்களைப் பெற்றுக்கொண்டு மெல்ல வீட்டிற்கு நடந்தாள். பரிசல்காரனும் தனக்கு சகுனம் சரியில்லை என்று சொல்லிக்கொண்டு, பரிசலை படித்துறையில் கவிழ்த்துவிட்டு மரத்தடியில் போய் படுத்தான்.

சில மணி நேரங்கள் கழிந்தன. ஒரு வாட்டசாட்டமான வாலிபன் அந்தப் பக்கம் வந்தான். “அண்ணே! பொழுது வீணா போகுது. போயி மீன் பிடிப்போமா?”, என்று மற்றொரு பரிசல்காரனை பார்த்துக் கேட்டான். “சரி வா தம்பி. போவோம்.”, என்று சொன்னபடியே பரிசல்காரனும் மெல்ல எழுந்தான். “இந்தா, துடுப்ப பிடி.”, என்று நீட்டினான். அதைப் பெற்றுக்கொண்டு வாலிபனும் பரிசலில் ஏறினான். பரிசல்காரனும் ஏறியவுடன் மெல்லத் துடுப்பு வலிக்கத் துவங்கினான். பரிசலும் சீராய் நகர்ந்து சுழலை நோக்கிச் சென்றது. “டே தம்பி, அந்தா ஒரு கூட்டம் மேயுதே, அத புடிப்போமா?.. ஆனா, அது கொஞ்சம் பூதத்துக்கு கிட்டத்துல இருக்கு, என்ன செய்ய?”, என்று அந்த வாலிபனிடம் பரிசல்காரன் கேட்டான். “அது ஒன்னும் சிக்கல் இல்ல. நா மட்டும் துடுப்பு வலிக்கறேன். நீங்க நல்ல பதிஞ்சு உக்காந்துகிட்டு, ரெண்டு கைய்ய வச்சு வல போட்டு இழுங்க. புடிச்சிடலாம்.”, என்று உறுதியளித்தான் வாலிபன். “இருந்தாலும் அந்த கூட்டம் கொஞ்சம் பூதத்து கிட்டத்துலதான் மேயுது. பாத்து!”, என்று எச்சரித்தபடியே பரிசல்காரன் வலை வீச தயார் ஆனான். சுழலுக்கு சற்று நெருக்கத்தில் பரிசல் வந்தவுடன் சரமழை போல் வலை குளத்தில் விழுந்தது. என்னதான் இருவருக்கும் இடையில் ஒத்திசைவு நன்றாக இருந்தாலும், அந்த கூட்டத்தின் எல்லா மீன்களும் வலையில் அகப்படவில்லை. சிலது இன்னும் ஆழத்தில் மேய்ந்துகொண்டுதான் இருந்தது. அதற்கு ஆசைப்பட்டு இன்னும் ஆழத்திற்கு சென்றால் அபாயம் என்று இருவரும் உணர்ந்தனர். ஆக, பிடித்ததை பரிசலில் ஏற்றிக்கொண்டு, மெல்ல கரை திரும்பினர். மீன்களின் துடிப்பு அடங்கியவுடன் அந்த வாலிபன் பிடித்ததில் கால் பாகத்தைப் பெற்றுக்கொண்டான். “இத சந்தைல வித்து காசாக்கிக்கிறேன்.”, என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து நடந்தான். நிறைய மீன்கள் பிடித்த மகிழ்சியிலும் சோர்விலும், பரிசல்காரன் கரையில் பரிசலை கவிழ்த்துவிட்டு, அதன் பேரில் தலைவைத்து உறங்கத் துவங்கினான்.

இதையெல்லாம் இத்தனை நேரம் அருகிலிருந்த மரத்தின் கிளையில் உட்கார்ந்துகொண்டு பார்த்திருந்த சிறுவன் ஒருவன் சட்டென்று தாவி கீழே குதித்தான். அவன் கையில் ஏதோ பிடித்திருந்தான். மூன்றாவது பரிசல்காரனிடம் ஓடினான். “சீக்கிரம் எழுந்திரி! நா உங்க பிரச்சினைக்கெல்லாம் தீர்வு கண்டுபுடிச்சிட்டேன் என்று கையில் பிடித்திருந்ததை நீட்டினான். அவன் உட்கார்ந்திருந்த மரத்தின் கிளைகளை உடைத்து நங்கூரம் ஒன்றைச் செய்திருந்தான். அதை வாங்கிப் பரிசோதித்தான் பரிசல்காரன். “இத போட்டா பரிசல் நின்னிடும்!”. என்றான் சிறுவன். “இதுகூட நல்ல யோசனையாதான் இருக்கு.”, என்று சொல்லி பரிசல்காரன் நங்கூரத்தை திரும்பச் சிறுவனிடம் கொடுத்தான்.

படித்துறையில் கவிழ்ந்திருந்த பரிசலை குளத்தில் தள்ளினான் பரிசல்காரன். வலையையும், கயிற்றையும், நங்கூரத்தையும் உள்ளே போட்டுக்கொண்டு இருவரும் ஆளுக்கு ஒரு துடுப்பை எடுத்துக்கொண்டு பரிசலில் ஏறினர். பரிசல்காரன் மெல்ல துடுப்பை வலிக்கத் துவங்கினான். பரிசல் சுழலை நோக்கி நகர்ந்தது. இதற்க்கிடையில் சிறுவன் அவன் துடுப்பின் ஒருமுனையில் நங்கூரத்தை கயிறுகொண்டு கட்டினான். துடுப்பின் மற்றொரு முனையில் ஒரு நீளக் கயிற்றின் ஒரு முனையைக் கட்டினான். அந்தக் கயிற்றின் மற்றொரு முனை பரிசலின் விளிம்பில் கட்டினான். “பூதத்துக்கு எவ்வளவு கிட்டத்தில் முடியுமோ போ!” என்று சொன்னான். பரிசல் சுழலுக்கு மிக நெருக்கத்திற்குச் சென்றது. அப்பொழுது தன் கை பலத்தையெல்லாம் பயன்படுத்தி தன் துடுப்பை சிறுவன் நீரினுள் எறிந்தான். நங்கூரம் கட்டியிருந்த முனை குளத்து மணலில் குத்திக்கொண்டு நின்றது. பரிசலும் பூதத்து வாய் அருகே மிதந்தது. பரிசல்காரன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். சட்டென்று அங்கு மேய்ந்துகொண்டிருந்த ஒரு பெரிய மீன் கூட்டத்தின் பேரில் வலையை வீசினான். மொத்த மீனும் சிக்கிக்கொண்டது. அதை பரிசலில் தூக்க முயன்றபோதுதான் அதன் கனத்தை பரிசல்காரன் உணர்ந்தான். அது இதுவரை அவன் ஒரே தடவையில் பிடித்த மீன்களின் எடையைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாய் இருந்தது. முதல் முறை முயற்சித்தான். நீரிலிருந்த பாதி தூரம்கூட அவனால் வலையை இழுக்க இயலவில்லை. தன் விரல்களால் அவன் தோள்களை பிடித்துக் கொடுத்துக்கொண்டான். வலி எடுத்தது.

மீண்டும் ஒருமுறை முயற்சித்தான். உடல் வியர்த்தது. கை வலியை பொருட்படுத்தக்கூடது என்று “ஓ!”, என்று கத்திக்கொண்டு இழுத்தான். இதைப் பார்த்த சிறுவனுக்கு பயம் வந்தது. சற்று நேரத்திலேயே அவன் அழத் துவங்கிவிட்டான். “என்னடா ஆச்சு?”, என்று வலையை இழுத்தபடியே பரிசல்காரன் கேட்டான். “நா வர வரைக்கும் நீங்கெல்லாம் நல்லா மீன் பிடிச்சுக்கிட்டு இருந்தீங்க. இவ்வளவு வலியெல்லாம் இல்ல. நா வந்தேன், எல்லாம் கெட்டுது! நா வந்துருக்கவெ கூடாது.. என்ன மன்னிச்சிருங்க!”, என்று விம்மி விம்மி அழுதபடியே சிறுவன் சொன்னான். “என்னடா சொல்ற!”, என்று பரிசல்காரன் கேட்டு முடிவதற்குள், சிறுவன் தரையில் குத்தியிருந்த நங்கூரத்தின் கயிற்றைப் பிடித்து இழுத்தான். நங்கூரம் நீரின் மேலே மிதந்தது. பரிசல் அதிவேகமாகச் சுழலத் துவங்கியது….

— அயலவன்

writing
Artwork: Maithreyi R
Neeraj Bharadwaaj
Author
Neeraj Bharadwaaj
Unapologetically curious