Skip to main content

கடவுளர் கண்விழித்த பொழுது…

திருச்சி மாநகரத்தின் துணை நகரமான (satellite town) திருவானைக்கோவிலில் தங்கியிருந்தேன். உறவினர் அடைக்கலத்தில் உண்டுக்கழித்த பொழுதொன்றில், இரவுப் பசியை இட்லிகள் போக்கிக்கொண்டிருந்தன. உறவினர்களோடு உட்கார்ந்து, இட்லியை அசைபோட்ட எங்கள் வாய்கள், அவ்வப்பொழு சில சொற்களையும் சிந்தின, இட்லியையும்தான் (இதைச் சொல்ல வேண்டாம் என்றே எண்ணி இருந்தேன். ஆனால், மூளையின் ஒரு முனை மறுப்பதற்கு முன்பு, பேனாவின் முனை எழுதிவிட்டது. ஆக, இருக்கட்டும் என்று வைத்துவிட்டேன்).

Church Hall
திருவானைக்கோயில், credits: Wikipedia

எங்களுக்கு அடைக்கலம் தந்த ஊருக்கும், இட்லி-சட்டினியுடன் நிகழ்ந்த உரையாடலுக்கும் ஒரே மையம்தான். அது, கோச்செங்க சோழன் எழுப்பித்ததாகச் சொல்லப்படும் ஜம்புகேஸ்வரர் கோயில்தான். உரையாடலில் பங்கெடுத்த வாய்களையும் செவிகளையும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று, அன்று மாலை அக்கோயிலிற்கு சென்றுதிரும்பியவர்கள். இரண்டு, கோயில் சென்று திரும்பியவர்களுக்கு இட்லி-சட்டினி செய்தவர்கள். இட்லிக்கு சுவை கூட்ட நல்லெண்ணை தடவி பகிர்ந்த இரண்டாம் கட்சியிடம், உரையாடலுக்கு சுவை கூட்ட அனுபவங்களை கற்பனையில் தோய்த்துக் கொடுத்தது முதற் கட்சி. நான் முதற் கட்சியில் இருந்தேன். ஆக, காளிதாசனும், கம்பனும் என் கற்பனையிடம் தோற்றுக்கொண்டு இருந்தனர்.

Church Hall
“அகிலா” எனும் கோயில் யானை

கோயில் யானை குளித்த கதையில் துவங்கி, கோயில் வளாகத்தில் திரிந்த கதை, இறைவன் தரிசனத்தில் நசுங்கிய கதை, கோயிலுக்கு அருகில் உள்ள பாரம்பரியமான ஐஸ்கிரீம் (icecream) கடையில் கிலோகிலோவாக ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் மரத்துப்போன நாக்கின் கதை என்று எங்கள் கதை நீண்டுக்கொண்டே சென்றது. இறுதியில், முதற் கட்சி பேசுவதற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்தக் கட்சியின் முக்கியப் பேச்சாளர் திருவானைக்காவலில் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தபடியால், கோயிலைப் பற்றியும், அந்த ஊரைப்பற்றியும் பேசலானார்.

ஒரு கட்டத்தில், பேச்சில் கற்பனையெல்லாம் குறைந்து, சில நிகழ்வுகளைப் பற்றி பேசினோம். அதில் ஒரு முக்கிய நிகழ்வாக, தினம் ஜம்புகேஸ்வரர் கோயிலில் நிகழும் திருப்பள்ளியெழுச்சி என்ற சடங்கைப்பற்றி சொன்னார், எதிர் கட்சிப் பேச்சாளர். இந்த சடங்கில், காலையில் தெய்வச்சிலைகளை எழுப்பி, அன்றைய நாளின் சடங்குகளைத் துவங்கிவைப்பதே முக்கியமான நிகழ்வு. இது பெரும்பாலான முக்கியக் கோயில்களில் நிகழ்வதுதான். ஆனால், நான் அதை அன்றுவரைப் பார்த்ததில்லை.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தினம் நடக்கும் திருப்பள்ளியெழுச்சி சடங்கின் பிரம்மாண்டத்தைப் பற்றி பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். மத்தளம் கொட்ட, கொம்புகள் முழங்க, சாம்பராணியின் புகையின் ஊடே, மக்கள் திருவாசகம் பாடி, தீபம் காண்பித்து ஆடலரசனை கோலாகலமாய் எழுப்புவார்கள் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்தக் கட்டுரையை எழுதும் இந்நொடிவரை அதைப் பார்க்க ஏங்கிக்கொண்டுதான் இருக்கிறேன்.

Church Hall
பூரி ஜகந்நாதர் கோயிலில் கொடியேற்றம்

ஆக, என் உறவினர் திருப்பள்ளியெழுச்சியைப் பற்றி சொன்ன பொழுது, இதே போன்ற பிரம்மாண்டத்தையே நான் ஜம்புகேஸ்வரரிடமும் எதிர்ப்பார்த்தேன். பல நூறு மக்கள் ஒருசேர எழுப்பும் கோஷத்தை, அக்கூட்டத்தினுள்ளே நின்று கேட்பது எனக்கு எப்போதும் புல்லரிப்பையே ஏற்படுத்தும். சான்றாக, பூரி ஜகந்நாதர் கோயிலில் கொடியேற்றம் பார்த்தபொழுது, சேப்பாக்கம் மைதானத்தில் தோணி வருகையை பார்த்தபொழுதெல்லாம் எனக்கு அப்பொழுது நினைவுக்கு வந்தது.

இவ்வாறான மாபெரும் மனிதக்கூட்டத்தோடு கடவுள் எழுப்பப்படுவார் என்று எண்ணினேன். ஆக, நாளை அந்தச் சடங்கைப்போய் பார்க்கவேண்டும் என்ற என் விருப்பத்தை தெரிவித்தேன். அவரும் அழைத்துப்போக சம்மதித்தார்.

கண்மூடிக் கண்திறக்கும் நேரத்துக்கெல்லாம் நாங்கள் கோயிலின் வடக்கு வாயிலின் வழியாக வளாகத்தினுள் புகுந்தோம். நான் எதிர்பார்ததவை எல்லாம் ஒன்றொன்றாக நிகழ நிகழ எனக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது. கதிரவன் கண்திறக்கும் நேரத்திற்கு முன்பே குளித்தால், இலேசாக பசிக்கும் என்று எண்ணினேன். அது நிகழ்ந்தது. விடியற்காலையில் கோயிலுக்கு நடந்தால் சுகமாக இருக்கும் என்று எண்ணினேன். அதுவும் நடந்தது.

ஆனால், நான் எதிர் பார்த்த இரண்டு நடக்கவில்லை. ஒன்று, நான் ஆவலோடு எதிர் பார்த்திருந்த பல நூறு மக்களை காணவில்லை. பிறகு, நான் எண்ணியதுபோல், நாங்கள் சிவன் சந்நிதியின் வாயிலில் போய் நிற்கவில்லை.

என் எதிர்ப்பார்ப்புகள் உடைக்கப்படுவதே என் வாழ்க்கையின் போக்காக அமைந்துவிட்டது. ஆக, இந்நிகழ்வும் அவ்விதமே. தங்கநிறக் கொடிமரத்தைத் தாண்டி, அகிலாண்டேஸ்வரி சன்னதிக்கு அருகில் வந்தோம். அதற்கு முன்தினம் மாலைதான் அங்கு பிதுங்கிய பல நூறு மனிதர்களுள் நானும் இருந்தேன். இப்பொழுது எங்களைத்தவிர யாருமே அங்கில்லாததால், அந்த மண்டபம் விநோதமாகத் தோன்றியது. ஆளரவம் அற்ற அந்த மண்டபத்தை ஒரே ஒரு மின்விளக்கு மிகவும் முயன்றபடி ஒளியூட்டியது.

மண்டபத்திற்கு உள்ளேவந்தவுடன், ஒரு இளம்பெண் எங்களை புன்னகையோடு வரவேற்றாள். விளக்கு ஒளியில் தெரிந்த அம்முகம், எங்கோ பார்த்தது போல் இருந்தது. இல்லை! யாரோ சொல்லிக் கேட்டதுபோல் இருந்தது. ஆம்! “லம்பாலகோத்பாசிதே ஹசிதே” (நீண்ட கூந்தலும் இளநகையும் உடையவள்) என்று முத்துஸ்வாமி தீக்ஷிதர் பாடிய பெண்தானே இவள்! இருநூறு ஆண்டுகள் ஆயினும், அந்த வர்ணனை இன்னும் பொய்க்கவில்லை.

Church Hall
முத்துஸ்வாமி தீக்ஷிதர்

தீப ஒளியில் எண்ணெய் பூசிய கருங்கல் சிலை மின்னியது. அருகில் சென்று பார்த்தபின்தான் அந்த சிலையின் நுணுக்கங்கள் எனக்கு புலப்பட்டன. நான் பலமுறை பார்த்து வியக்கும் உளி-சிற்பிக் கூட்டணியை அங்கும் கண்டு வியந்தேன். ஆளுயரச்சிலை, அதில் தவழும் புன்னகை, புருவங்கள் இலேசாக எழும்பியவாறு இருப்பதும், கண்கள் பைய்யப் பார்ப்பதும், இடையிலும் முட்டியிலும் ஒரு சின்ன வளைவால் அந்த சிலையோடு இயைந்த ஏளனமும் என்று அதை வியந்துகொண்டே போகலாம். நான் பார்த்தபோது, ஒரு வெள்ளை நிறப் புடவை அணிவிக்கப்பட்டிருந்தது.

அந்தச் சிலைக்கு முன்னின்றபடி, சிற்பியை வாழ்த்திக்கொண்டிருந்த வேளையில், பின்னிருந்து ஒரு குரல் “இப்பொழுது இந்த சிலைக்கு உயிர் இல்லை” என்றது. அதென்ன! இவ்வளவு தத்ரூபமாக செய்யப்பட்டரிக்கும் சிலைக்கு உயிர் இல்லையா? இதை யார் சொன்னது என்று திரும்பிப் பார்த்தேன். ஒரு வயது முதிர்ந்த பெரியவர், நெற்றியில் பட்டை, இடையில் வேட்டி ஒன்று மட்டும் அணிந்தபடி நின்றிருந்தார். என் முகத்தில் தெரிந்த குழப்பத்தின் ரேகைகளை கண்டு, “இந்தச் சிலைக்கு இப்பொழுது உயிர் இல்லை. வா, அதற்கு உயிர் கொடுப்போம்” என்றார்.

எது என்ன!? சிலைக்கு நான் உயிர் கொடுப்பதா? பக்தர்களுக்கு எல்லா இடத்திலும் இறைவனே தெரிவான் என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இவருக்கும் எல்லாம் இறைவனாகவே தெரிகிறது போலும். அதனால்தான் என்னை சிலைக்கு உயிர் கொடுக்க அழைக்கிறார் என்று எண்ணினேன். பிறகுதான், அவர் சொன்னதின் பொருள் எனக்கு விளங்கியது.

அகிலாண்டேஸ்வரி சன்னிதிக்கு அருகில் மற்றும் ஒரு சின்ன சன்னதி இருந்தது. புது கருங்கல், புது வண்ணச்சாயம், புது கலசம் என்று முற்றிலும் புதிதாய் காணப்பட்டது அச்சன்னதி. அதன் வாயிலுக்கு அருகில் சில மனிதர்கள் நின்றனர். அதில் என் உறவினரும் இருந்தனர். அக்கூட்டத்தை நோக்கியே இந்த பெரியவரும் நடந்தார். நான் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். அங்கு அவர்கள் கூடி இருப்பது எதோ பிரசாதம் வாங்குவதற்குத்தான் என்று எண்ணியே நானும் அங்கு சென்றேன்.

என் எதிர்பார்ப்பு மீண்டும் உடைக்கப்பட்டது! என் உறவினரிடம் சென்று, “இங்கு எதற்கு கூடியிருக்கிறறோம்” என்று கேட்டேன். “நீதானே திருப்பள்ளியெழுச்சி பார்க்கவேண்டும் என்றாய். அதற்காகத்தான் காத்திருக்கிறோம்” என்றார். “சரி, அதற்கு ஏன் இங்கு நிற்கிறோம்?” என்று நான் கேட்டேன். “இதுவே தெரியாதா உனக்கு!” என்று சொல்லிவிட்டு கீழே உள்ளவாறு சொன்னார்:

இரவு கோயிலை மூடும் பொழுது, சந்நிதியில் வைக்கப்பட்டுள்ள உற்சவர் சிலையை வெளியே எடுத்து வருவார்கள். அந்தச் சிலை வெளியேகொண்டுவந்த பிறகு, மூல சிலைக்கு உயிர் இல்லை. உற்சவரை நாம் நிற்கும் இந்த சந்நிதியினுள் வைத்து மூடிவிடுவார்கள். ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி இருவரின் உற்சவர் சிலைகளும் உள்ளே இருக்கும். நாம் இப்பொழு அதை எடுத்து, மீண்டும் அந்த சன்னிதிக்கு அருகில் வைக்கப்போகிரோம்.

இதைக் கேட்டவுடன் என் எதிரிப்பார்ப்பு முற்றிலுமாக உடைக்கப்பட்டது. நான் ஏங்கிய பிரம்மாண்டம் இல்லை, நான் வேண்டிய கோஷங்கள் இல்லை. இவையெல்லாம், எனக்கு வருத்தத்தையே தந்தன.

இதையெல்லாம் கேட்டவுடன் என் எதிர்ப்பார்ப்பு முற்றிலுமாக உடைக்கப்பட்டது. இந்த கோயிலில் திருப்பள்ளியெழுச்சி என்பது ஒரு சிறு சடங்குதான் போலும். பிரம்மாண்டம், ஆரவாரம் எல்லாம் இல்லை என்றவுடன் எனக்கு ஆர்வமே போய்விட்டது.

என்னைப் போலவே மற்றும் இரு ஜீவன்கள் அந்த மண்டபத்தில் இருந்தன. அது ஒரு பூனையும் அதன் குட்டியும். அவற்றுக்கும் நிகழவுள்ள நிகழ்ச்சியின் பேரில் ஒரு ஆர்வம் இருந்ததாகத் தோன்றவில்லை. பசியின் காரணமாக மெல்லிய குரலில் இரண்டும் கத்திக்கொண்டிருந்தன. நான் அருகில் சென்று அமர்ந்ததும், அவை என் அருகில் வந்து உட்கார்ந்துகொண்டன. “இந்த சடங்கை நான் தினமும் பார்க்கிறேன். இதற்காகவா நீ இங்கு வந்தாய்?” என்று அந்தக் குட்டிப் பூனை கேட்டது. நான் வருத்தத்துடன் தலை அசைத்தேன். “சரி, வந்ததுதான் வந்தாய். திருப்பள்ளியெழுச்சி முடிந்தவுடன் பால் தருவார்கள். அதை வாங்கி குடித்துவிட்டுப்போ. நானும் அதற்குத்தான் காத்திருக்கிறேன். பால் குடித்தபின்பு, இங்கு எனக்கு என்ன வேலை?” என்றது.

பூனையின் சொல் கேட்டு அதன் அருகிலேயே அமர்ந்திருந்தேன். சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு சிவனடியார் வந்தார். “ஓம் நமச் சிவாய” என்று உரக்க குரலில் உறுமிவிட்டு, அந்தச் சன்னிதியின் கதவுகளைத் திறந்தார்.

ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி இருவரின் திருவுருவச் சிலைகள், ஒரு சின்ன கட்டிலின்மேல் வைக்கப்பட்டு இருந்தது. அதை சுற்றிலும் கண்ணாடிகள். இருவருக்கும் பட்டு உடைகள் அணிவிக்கப்பட்டிருந்தது. கதவுகள் திறந்தவுடன் அதனருகே கூடியிருந்தவர்கள் மாணிக்கவாசகர் எழுதிய திருப்பள்ளியெழுச்சியை ஓதத் துவங்கினார்கள். “எம்பெருமான் பள்ளி எழுதந்தருளாய்” என்று முடியும் பத்து பதிகங்களையும் பாடலானார்கள்.

யாரும் தேர்ச்சிபெற்ற பாடகர்கள் இல்லை. எல்லோரும் எங்களைப் போல சாதாரண மக்கள்தான். ஆனால், ஒரே சீராக ஓதினார்கள். அவரவர் தனிக்குரல் ஒலிக்காது, ஒரேயொரு குரல் மட்டும் கம்பீரகாமாக் கேட்டது. இதற்குள்ளாக இருவர், ஒரு பல்லக்கைச் சுமந்துவந்து அந்தச் சன்னதி முன்னால் வைத்தனர்.

Church Hall
பல்லக்கு

சிவனடியார்களும், பல்லக்கு சுமந்தவர்களும் திருப்பள்ளியெழுச்சிப் பதிகங்கள் முடியும்வரை காத்திருந்தனர். “அவனியற் புகுந்தெமை ஆட்கொள வல்லாய் ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே” என்ற கடைசிவரையை ஓதியபின்னர், சிவனடியார், இருச் சிலைகளையும் தூக்கி பல்லக்கில் அமரச் செய்தார். “ஓம் நமச் சிவாய” என்று மூன்று முறை அனைவரும் உரத்தக் குரலில் உறுமினார். மூன்றாவது முறை “ஓம்” என்று முழங்கும் பொழுதே பல்லக்கை சுமந்த இருவரோடு இணைந்து பலரும் அதை சுமக்கத்துவங்கினர். பல்லக்கு நகரத்துவங்கியது. அதுவரை திருப்பள்ளியெழுச்சி பாடியவர்களும் கடவுளரோடு அப்பொழுதான் விழித்துக்கொண்டனர். பல்லக்கு சுமக்கும் பொழுது, சிவபுராணம் பாடத்துவங்கியபொழுது அவர்கள் குரல் மிகவும் உறக்கமடைந்துவிட்டது.

“கணீர்” என்று ஒரே குரலில் பதினைந்து இருபது பேர் சிவபுராணம் பாட, பல்லக்கு மெதுவாக நகர்ந்தது. கோயிலை ஒரு வட்டம் அடித்தபின்பு, ஜம்புகேஸ்வரர் சன்னிதியின் வாயிலை வந்தடைந்தது. பல்லக்கோடு நடந்துவந்த நான், வாயால் சிவபுராணத்தை முனுமுனுத்தாலும், என் மனம் வேறொன்றை சிந்தித்தது. இதென்ன! பேரண்டத்தையும் அதன் பன்முகத்தன்மையையும் படைத்ததாகச் சொல்லப்படும் பரம்பொருளை இங்கு பச்சிளங்குழந்தையைப் போல் நடத்துகிறார்களே!

Church Hall
திருப்பள்ளியெழுச்சியும் சிவபுராணமும் இயற்றிய மாணிக்கவாசகர்

அப்பொழுது, “கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தார் போல” என்ற சிவபுராண வரி காதில் எட்டியது. நீ யாவற்றையும் ஆக்கிய பரம்பொருளாகவே இருப்பினும் என் உவமைகளுக்கு நீ ஆட்பட்டால்தான் என்னால் உன்னை புரிந்துகொள்ள இயலும். பாலினோடு நெய் இருப்பது போல், என் வாழ்வின் அன்றாடங்களோடு உன்னை பொருத்திப் பார்த்தால்தான் என்னால் உன்னை சிந்திக்கவே இயலும். என்னைப் போலவே உண்டு, உறங்கி, விழித்து, நோய்ப்பட்டு, மருந்துண்டு வாழும் ஒருவனே என் எண்ணத்திற்கும் கற்பனைக்கும் நெருக்கமானவன். யாவற்றையும் படைத்த உருவமற்ற பரம்பொருளை என் சிந்தனை அறியா.

ஆக, இது போன்ற சடங்குகளும், நிகழ்சிகளும, நம் நடவடிக்கைகளுக்கும் சிந்தனைக்கும் அப்பால் உள்ள கருத்தை நம் உவமைகளை ஆட்படச் செய்யும் முயற்சிகள் என்று தோன்றியது. என்னைப் போன்ற ஒருவனும் எனக்கு அப்பால் உள்ள ஒன்றைப் பற்றி சிந்திக்கவைக்கிறது என்றால், அதுவே இதுபோன்ற சடங்குகளில் நோக்கம். அதற்குமேல் அதில் பொருள்காண்பதற்கு ஒன்றும் இல்லை.

இதை சிந்தித்துக்கொண்டே பல்லக்கைத் தொடர்ந்து நடந்தேன். ஜம்புகேஸ்வரர் சன்னதியின் வாயிலில் அதை இறக்கினர். அனைவரும் சந்நிதிக்கு உள்ளே சென்று ஜம்புகேஸ்வரரை தரிசித்தோம். நாங்கள் எல்லாம் சேர்ந்து உயிர் கொடுத்த சிலையை பார்த்தோம்! இந்த சிந்தனை எனக்கு புல்லரிப்பையே தந்தது. நான் எதிர்பார்த்தது நிகழ்ந்துவிட்டது. ஆனால், நான் எதிர்பாராத விதத்தில் நிகழ்ந்துவிட்டது.

சரிபார்த்தல்:

  • மு. கல்யாணசுந்தரம்
Neeraj Bharadwaaj
Author
Neeraj Bharadwaaj
Unapologetically curious