இரண்டு குன்றுகளுக்கு இடையே ஒரு கடற்கரை இருந்தது. அந்தக் கடற்கரையில் ஒரு காகம் வசித்து வந்தது. அந்த காகத்திற்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அதன் ஒரு கால் மணலில் நட்டிருந்த மரக்கொம்பு ஒன்றில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது. இதனால் அந்த சங்கிலியின் நீளத்தைத் தாண்டி அந்த காகத்தால் நகர முடிந்ததே இல்லை.
அதன் அருகே இருந்த பாறைகளில் உட்காரும் பூச்சிகளைப் பிடித்து தின்னும். பாறை குழிகளில் தேங்கும் மழை நீரையும், பாறை நிழலில் மூக்கால் தோண்டியும் தண்ணீரும் பருகும். அவ்வப்போது பறக்க முயற்சி செய்யும். ஆனால், காலில் கட்டிய சங்கிலி இழுத்து தரையில் தள்ளிவிடும். மணலில் புரண்டு எழுந்து தன் உடலை உதறிக்கொள்ளும்.
சமீபத்தில் தான் ஒரு நண்டை பிடித்து தின்றது. அந்த சங்கிலியை உடைக்க வேண்டும் என்று காகம் பலமுறை முயற்சித்து இருக்கிறது. தன் அலகைக் கொண்டு சங்கிலியை பலமுறை கொத்தி உடைத்து விடப் பார்த்திருக்கிறது. முடிந்ததே இல்லை. தன் உடலில் தான் அதற்கான வலிமை போதவில்லை என்று எண்ணி நன்கு உண்ணத் துவங்கியது. நண்டு பிடித்த காகத்திற்கு ஒரே மகிழ்ச்சி! இது போல் இன்னும் நாலைந்து சாப்பிட்டால் சங்கிலியை உடைத்து விடலாம் என்று எண்ணி “கா …கா…கா !” என்று கத்தியது. ஆனால் நான்கைந்து நண்டுகள் சாப்பிட்ட பின்னரும் காகத்தால் சங்கிலியை உடைக்க முடியவில்லை.
அந்த காகத்தை சுற்றிலும் பாறைகளாக இருந்தது. அதனால், கடற்கரை மணல் வெளியை காகம் கண்டதே இல்லை. தூரத்து மலைகளையும், கடலையும், வானத்தையும், பாறைகளையும் தாண்டி அது வேறு எதையும் கண்டதே இல்லை. அங்கே, தன்னோடு வேறு யாராவது இருக்கிறார்களா? என்ற சிந்தனை காகத்தை பலமுறை ஆட்கொண்டு இருக்கிறது. சில நேரம் அதை எண்ணி அச்சம் வரும். சில நேரம் அதற்காக ஏக்கம் வரும். ஆனால் அந்த கேள்விக்கு விடை தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வம் மட்டும் மாறாமல் இருந்ததது. அவ்வப்போது மற்றொரு காகம் கரைவது போல சத்தம் கேட்பதாகத் தோன்றும். ஆனால் அது தன்னுடைய கற்பனை தான் என்று எண்ணி காகம் அதை பொருட் படுத்தியதே இல்லை.
ஓர் இரவு மீண்டும் அந்த சத்தம் கேட்டது. அதுநாள்வரை கேட்டதைக் காட்டிலும் அதிக ஓசையில் நீண்ட நேரம் கேட்டது. அது தன் கற்பனையாக இருக்க முடியாதென்று காகம் உணர்ந்தது. உடனே அந்த காகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அந்த காகம் கரைவதைக் கேட்டால் அது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போல் தோன்றியது. அப்படி எதைக் கண்டு அது அவ்வளவு மகிழ்ச்சியாக கரைகிறது என்று காகம் யோசித்தது. அவ்வளவு மகிழ்ச்சி தரும் எதுவும் தான் வாழ்கையில் இல்லையே என்று எண்ணி பொறாமைப்பட்டது. ஒரு வேளை சங்கிலியை உடைத்து இருக்குமோ என்ற எண்ணம் வந்தது. அதற்கு வாய்த்தது தனக்கு வாய்க்காமல் போகக்கூடாது என்று எண்ணி சங்கிலியை உடைக்க துவங்கியது. அந்த காகமும் ஏன் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்ற சிந்தனை அதற்கு வரவே இல்லை.
இறக்கைகளை அடித்துப் பறந்து கொண்டே சங்கிலியை இழுக்க முயற்சித்தது. முதன்முறை தன்னையே இழுத்துக் கொண்டு தரையில் விழுந்தது. இரண்டாவது முறை இழுத்தும் வரவில்லை. ஆனால் இன்னும் கொஞ்சம் இழுத்தால் உடைந்து விடும் என்று தோன்றியது. மூன்றாவது முறை சிறகை நன்கு அடித்துப் பறந்து கொண்டே சங்கிலியைப்பிடித்து இழுத்தது. சங்கிலி இரண்டு துண்டாய் உடைந்தது. இறக்கைகளை வேகமாக அடித்து பறந்து சங்கிலி கட்டியிருந்த கொம்பின் மேல் உட்கார்ந்தது. தான் உடைத்த சங்கிலியின் துண்டு கொம்பின் கீழ் கட்டப்பட்டு இருந்ததை கண்டது. தன்னை இத்தனை நாள் கட்டிவைத்து இருந்த கொம்பின்மேல் தான் உட்கார்ந்திருப்பது கண்டு “கா…கா “என்று கத்தியது. தலைகால் புரியாமல் வானத்தில் வட்டமடித்து கடலலைகள் அருகே சென்று இறங்கியது. இனி தான் எப்படி வேண்டுமானாலும் பறக்கலாம் என்று எண்ணி எண்ணி மகிழ்ந்தது. கடல் நீரின் குளிர்ச்சி காலில் பட்டவுடன் இன்னும் மகிழ்ந்தது.
தூரத்தில் கடலில் எதோ வெள்ளையாக மிதந்து கொண்டு இருப்பது போல் தெரிந்தது. நிமிர்ந்து வானத்தை பார்த்தது. பிறை நிலாவும், பல கோடி கோடி விண்மீன்களும் தெரிந்தன.
காகத்திற்குச் சட்டென பயம் வந்தது. இரவில் கடல் கருப்பாக இருப்பது தெரிந்தது. கடற்கரை மணலில் அலைகள் எழுதிய கோடுகள் தெரிந்தன. தூரத்து மலைகளும் கறுப்பாக தெரிந்தன. அத்தனை நாள் வசித்த கொம்பும், பாறையும் புதிது போல் தெரிந்தது. ஒவ்வொரு அலைக்கும் பிறகும் கடலின் “ஓ” என்ற சத்தம் கேட்டது. காகத்திற்கு தான் மூச்சு விடும் சத்தம் கேட்டது. ஒவ்வொரு அலைக்கு பிறகும் மணலும் மூச்சு விடுவது போல் தெரிந்தது. காற்றடித்தது. சிறகுகளில் காற்று குளிர்ச்சியாகப் பட்டது. ஆயினும், தன் உடல் சூடாக இருப்பது போலவே தோன்றியது. மீண்டும் காற்று பட்டது. உடல் சிலிர்த்து, குளிர்ந்து போனது. காகத்திற்கு அச்சம் கூடியது. அது நடுங்கியது. அத்தனை நாள் சங்கிலியை உடைக்க முயற்சித்ததெல்லாம் இதற்கு தானா என்று எண்ணியது. ஏன் பயமாக இருக்கிறது என்று சிந்தித்தது. வழி தொலைந்து போனால் என்ன ஆவது என்று எண்ணியது. எங்கு செல்ல வேண்டும் என்றே தெரியாதபோது எப்படி வழி தொலையும் என்று எண்ணியது.
சுற்றும் முற்றும் பார்த்தது. தூரத்தில் மற்றொரு காகம் மெல்ல கடலை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. அதன் காலிலும் ஒரு சங்கிலியின் துண்டு இருந்தது. அதைக் கண்டவுடன் என்ன செய்வதென காகத்திற்கு தெரியவில்லை. கூப்பிட வேண்டும் எனத் தோன்றவில்லை. ஆனால் தன்னைக் கண்டு கொள்ளாமல் பறந்து சென்றால் என்னாவது என்று எண்ணியது. ஒருமுறையாவது தன்னைப் பார்த்துவிடாதா என்று எண்ணியபடியே கடலருகே நின்றது காகம்.
— அயலவன்