காற்று அடித்தது. அதன் குளிர்ச்சி தோலில் பட்டது. ஆனால் உடல் குளிரவில்லை. குளிர்ச்சிக்கும் வெப்பத்திற்குமான சண்டையில் உடல் புல்லரித்தது. பழக்கப்பட்ட இருட்டுக்குள் நுழைந்தான்.
அந்த மொட்டைமாடியும், வாட்டர் டாங்கும் அவனுக்கு பழக்கப்பட்டத் தனிமைகள் தான். அங்கே படுத்துக்கொண்டு நட்சத்திரங்களைப் பார்ப்பது அவனை அலாதியான விதங்களில் அசைத்திருக்கிறது. அங்கே தெரியும் பேரண்டத்திற்கும் தனக்கும் இடையே எதுவும் இல்லை என்ற உணர்வு அவனை ஒரு ஒட்டுமொத்தத்தோடு கலக்க செய்திருக்கிறது.
அங்கே தெரியும் பேரண்டத்திற்கு முன்பு, தான் எதுவும் இல்லை என்ற உணர்வு அவனை சின்னஞ்சிறிதாய் கூனிக்குறுக செய்திருக்கிறது. விடுதலையும், வெறுமையும் மாறி மாறி அளித்த வானத்திற்கு அவனும் ஒன்றளிப்பான்.
தழுதழுத்த குரலில் ஒரு பாட்டு பாடுவான்.
“நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம் சொப்பனம் தானோ?
பல தோற்ற மயக்கங்களோ?”
அதிலும், “காலமென்றே ஒரு நினைவும்
காட்சியின் பல நினைவும்”
என்ற வரி அவனை ஒவ்வொரு முறையும் தவறாது தீண்டிவிடும். சில முறை பாரதியைத் திட்டுவான். சில முறை வானத்தைத் திட்டுவான். சில முறை தன்னையே திட்டிக்கொண்டு நொந்து கொள்வான். வடியும் கண்ணீரில் அன்றாடத்தின் பாரங்கள் சற்றுக் குறைவதாக உணர்வான்.
கடற்கரையில் நிற்கும் உணர்வையே அவனுக்கு அந்த வாட்டர் டாங்க் அளித்தது. ஏதோ இரண்டு பெரிய உலகங்களின் விளிம்பில் நிற்பதாகத் தோன்றும். பானை வாயில் ஊரும் எறும்பு போல விளிம்பில் வசிக்கத் துவங்கினான்.
விளிம்பு கொஞ்ச நாளிலேயே பள்ளமானது. இரண்டு பெரிய கட்டிடங்களுக்கு இடையே ஓடும் சந்தானது. அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக குறுகத் துவங்கியது. இரண்டு கட்டிடங்களுக்குமான இடைவெளி குறையத் தொடங்கியது. கட்டிடங்கள் ஒன்றை நோக்கி மற்றொன்றாக நகரத் துவங்கியது. நடுவில் இருப்பதை எல்லாம் பெயர்த்து நொறுக்கிக்கொண்டு நகர்ந்நது. சந்து இடுக்கில் தெரிந்த வானமும் கூரைகளுக்குப் பின்னால் மறைந்தது.
தானும் நொறுங்காமல் தப்ப வேண்டும் என்றால் ஏதேனும் ஒரு கட்டிடத்தினுள் புக வேண்டும். இரண்டையும் திறக்கும் சாவிகள் அவன் கையில்தான் இருந்தன. ஆனால், எதனுள் செல்ல வேண்டும் என்ற முடிவை மட்டும் அவனால் எடுக்க முடியவில்லை. அந்த முடிவை எடுக்க வேண்டிய நெருக்கடி மட்டும் நாளுக்குநாள் கூடிக் கொண்டே சென்றது. எதையாவது செய்துவிட வேண்டிய நெருக்கடியும், எதுவுமே செய்ய முடியாத இயலாமையும் அவனை ஒரு சேரப் பற்றி பிடுங்கித் தின்றது.
எரிந்து அணைய வேண்டும் என்ற தீயும், எரியாமல் அணைக்க வேண்டும் என்ற நீரும் அவன் உள்ளே தான் இருந்தது. மீண்டும் வெப்பத்திற்கும், குளிர்ச்சிக்குமான சண்டை அவனை சிலிர்க்க வைத்தது.
ஒவ்வொரு அலையைத் தொடர்ந்தும் ஒரு ஓலம் கேட்டது. சாகாத ஒன்றிடம் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தது கடல். இன்னும் கொஞ்சநாள் பொறுக்கக் கூடாதா என்று கேட்க வேண்டும் போல் இருந்தது.
காலையிலிருந்து “ உம் “ கொட்டியிருந்தான். ஏதேதோ கேட்டிருந்தான். மாலையே ஆனது. சொல் அலைகளைத் தொடர்ந்தும் ஓலம் கேட்டது. “நீ எப்படி இருக்க?” என்று கேட்கப்பட்ட போது ஒப்பாரியே கேட்டது. அழ முடியாது. அவனுக்குத்தான் அழுகை வருவதில்லையே
“நான் கொஞ்ச நாளா தற்கொலையப் பத்தி யோசிச்சிட்டு இருக்கேன்” என்றாள்.
“நான் பண்ணிக்கிறதப்பத்தி யோசிக்கல. மக்கள் பண்ணிக்கிறதப்பத்தி யோசிச்சிட்டு இருக்கேன்.
“என்ன யோசிக்கிற? “ ,என்று கேட்டான்.
“முதல்ல நாமெல்லாம் ஏன் தற்கொல பண்ணிக்கிறோம்னு யோசிச்சேன். பெரிய காரணம் ஒண்ணும் தெரியல. அப்புறம் நாமெல்லாம் ஏன் தற்கொல பண்ணிக்க மாட்றோம்னு யோசிச்சேன். நியாயப்படி பார்த்தா நம்ப வாழ்க்கைல இருக்கிற பிரச்சனைக்கும் சிக்கலுக்கும் செத்துடுறது ஒரு நல்ல தீர்வுதான். ஆனா, நாம செத்துடுறது இல்லை! நம்மல்ல பெரும்பாலானவங்க வாழத்தானே செய்றோம். அப்போ எது நம்ம வாழ வைக்குதுன்னு யோசிச்சேன். அப்புறம் திடீர்னு ஒருநாள் நம்ம சாகவும் தூண்டுதே அது என்னனு யோசிச்சேன்” என்றாள்.
“ஏதாவது பதில் கிடைச்சுதா?” என்று கேட்டான்.
“தெரியல! ஆனா இதப்பத்தி யோசிக்கிறது ரொம்ப சுவாரசியமா இருக்கு. வாழணும்னு நினைக்கிறதுக்கும், சாகணும்னு நினைக்கிறதுக்கும், வாழணும்னு நினைக்கிறதையும், சாகணும்னு நினைக்கிறதையும் தாண்டி வேற எந்த காரணமோ, அர்த்தமோ இருக்கிற மாதிரி எனக்குத் தெரியல”என்றாள்.
“மறுக்கத் தோணல! ஆனா, இதுமட்டும் இல்லன்னு தோணுது” என்றான்.
“நீ சொன்னியே, நியாயப்படி பார்த்தா நம்ப வாழ்க்கைல இருக்கிற பிரச்சனைக்கும், சிக்கலுக்கும் செத்துடுறது ஒரு நல்ல தீர்வுதான்னு… அந்த மாதிரி என் வாழ்க்கைல பிரச்சனையும் சிக்கலும் கூடுறப்போ, நான் மனசு வச்சா நா செத்துடலாம்ன்ற உணர்வே என்னை வாழ வச்சிருக்கு. வாழ்க்கைல சிக்கல் மிகுறப்போல்லாம் நா செத்து இதுலேர்ந்து தப்பிச்சுக்லாம்னு சிந்திக்கிறதே என்ன பல நேரங்கள்ள தக்கவைச்சு இருக்கு. ஒரு கதவு எப்போதும் திறந்தே இருக்கிறமாதிரி தோனும். வாழ்க்கைக்கு உள்ள claustrophobicஆ உணராம இருக்க எனக்கு தற்கொலங்குற வழி பெரிசா உதவியிருக்கு. என்னால இப்போ சாக முடியும். ஆனா நா வாழ முடிவு பண்றேன். அப்போ நான் வாழுறதே என் தீர்மானத்துனாலதான் . நா தொடர்ந்து வாழுறதையே நான்தான் தீர்மானிக்கும் போது, அந்த வாழ்க்கைல இருக்கிற சிக்கல என்னால தீர்மானிக்க முடியாதான்னு தோணும். அப்புறம்தான் என்னால அந்த சிக்கலப் பத்தியே தெளிவா யோசிக்க முடியும். ஆனா இப்போல்லாம் வர சிக்கலுக்கு தற்கொலை உணர்வு வரப்போ, நா அத மனசுல வச்சிக்கிட்டு சிக்கலப் பத்தி யோசிக்காம, தற்கொலையப் பத்தி யோசிக்கிறேன். Roomஅ விட திறந்த கதவு இப்போ சுகமா தோணுது” என்றான்.
இதைக் கேட்ட அவள் கண்களில் கண்ணீர் பொங்கியது. கால் முட்டிக்குள் தலையைப் புதைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதாள். பல அலைகள் வந்து போயின. அந்தக் கடலும் சாகாத ஒன்றுக்கு ஒப்பாரி வைத்தது.
காற்றடித்தது. இருள் சூழ்ந்தது. வாட்டர்டாங்கின்மேல் நின்று கொண்டு இருந்தான். வானத்து நட்சத்திரங்களெல்லாம் ஏதோ ஒரு கருப்பு படலத்திற்குப் பின்னால் சென்று மறைந்து கொண்டது. பேரண்டமே அவனுக்கு மூடிக்கொள்வது போல இருந்தது. ஒரு வேளை, இதைப்பார்க்க மனம் வராமல் மறைந்து கொண்டதோ என்று ஒரு நொடி சிந்தித்தான். அவனுக்கு அந்த வேளையிலும் சந்தோஷம் தோன்றுகிறது என்பதை எண்ணி ஒரு நொடி வியந்தான்.
சில மணி நேரங்களுக்கு முன்னால் கிறுக்கியிருந்த காகிதத் துண்டு ஞாபகத்திற்கு வந்தது. சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாச்சா என்று எண்ணிப் பார்த்துக் கொண்டான். எண்ணம் எழவில்லை. சரி, இப்போது என்ன அதைப்பற்றி அக்கறை என்று முணுமுணுத்துக் கொண்டான்.
அவன் படித்துக் கீழே போட்டிருந்த புத்தகத்தைக் கையில் எடுத்தான். அது ஏதோ வரலாற்றுப் புத்தகம். அதில் அவன் கடைசியாக வாசித்திருந்த பக்க எண்ணைப் பார்த்துக் கொண்டான். ‘அடுத்த ஜன்மத்தில் தொடர்ந்து படிக்கலாம்’ என்று சொல்லிக் கொண்டான் ‘இது என்ன மடத்தனம், மீண்டும் இங்கேயே வருவதற்கு இப்பொழுது எதற்கு போவானேன்?‘
வாட்டர் டாங்க் விளிம்பில் ஒரு கருத்த பள்ளம் இருந்தது. அந்த பள்ளம் அவனை அழைத்தது. காற்றடித்தது. உடல் வெப்பம் சட்டென்று குளிர்ந்து போனது. உடல் வியர்த்தது. கைகால்கள் நடுங்கின. மீண்டும் காற்றடித்தது. ஒரு ஓலம் கேட்டது.
கால் வழுக்கியது.
ஒரு நொடியில் அவன் இரு கைகளும் வாட்டர் டாங்க் விளிம்பைப் பிடித்து தொங்கிக் கொண்டு இருந்தன. கீழே இருள் அழைத்தது. மேலே வானத்தில் இருள் மறைத்தது.
மனம் ஒரு குரங்காம். அது தாவி விட்டது. அவன் குரங்கில்லையாம், மனிதனாம். அதனால் அவனால் தாவ முடியவில்லை. ஆற்றலின் கடைசி துளிவரை சேகரித்துக் கொண்டு, தன் கைகளை ஊன்றி, தன் உடலை மேலே இழுக்க முயற்சித்தான். வாழ்க்கையின் அர்த்தத்திற்கான தேடல் அவனை எங்கு கொண்டு வந்திருக்கிறது என்பதைப் பார்த்தான். ஒரு நொடி சிரிப்பே வந்தது.
கைகள் ஆட்டங்காட்டின. இருந்தும் உடல் வாட்டர்டாங்கின் மேல் வந்தது. எழுந்து நிற்க முயற்சித்தான். கால்கள் ஆட்டங்கண்டு அவனை கீழே தள்ளின. தலை தரையில் இடித்து வீங்கிப் போனது. ஒரே ஒரு முறை அழுகை வந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. அழுகையின் பேரில் அருவருப்பே வந்திருந்த அவனுக்கு அப்படித் தோன்றியது ஆச்சரியமாக இருந்தது.
மீண்டும் முயற்சி செய்து எழுந்து நின்றான். காற்றடித்தது. வானத்தில் ஓரிரு நட்சத்திரங்கள் தெரிந்தன.
ஒட்டு மொத்தத்தோடு கலந்தே பழகிய அவன் முதன்முறையாக ஒட்டுமொத்தமே தானாக நின்றான் .
காற்றடித்தது. இருள் சூழ்ந்தது.
முட்டிகளுக்கு இடையே இருந்து தலையைத் தூக்கினாள். கண்களெல்லாம் குளமாகிக் கிடந்தன.
“உன் வாழ்க்கைல நான் உன்கூட இருக்கணும்னு சொல்ற. நீ எப்போ வாழப் போறன்னும், சாகப்போறன்னும் நீயே முடிவு பண்ணிக்கிட்டா, என்னால எப்படி உன் கூட இருக்க முடியும்?” என்று கேட்டாள்.
மௌனமாக இருந்தான். கடல் மட்டும் ஓலமிட்டது.
“ போ, நா ஒரு இடத்துக்கு போகணும். என்ன அங்க விடு, வா.” என்றாள்.
இருவரும் அங்கிருந்து நடந்தனர். கடல் மட்டும் ஒப்பாரி வைத்துக்கொண்டே இருந்தது.
நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு இருந்தான். மடிமேல் ஒரு சின்ன காகிதச்சீட்டு வந்து விழுந்தது. அதை அவன் உடனே அடையாளம் கண்டு கொண்டான்.
நாற்காலி அருகே அவள் நின்று கொண்டு இருந்தாள்.
“ படி…ப…படி…படிச்சியா? “ என்று தயங்கித் தயங்கிக் கேட்டான்.
தலை அசைத்தாள்.
“கவிதை ரொம்ப நல்லா இருந்துச்சு” என்று சொல்லிவிட்டு புன்னகைத்தாள்.
காற்று நின்று போனது .
சில வறட்சிகள் மழைக்காலத்தைத் தாண்டியும் நீடிக்கும் என்று உணர்ந்தான்.
— அயலவன்