ஒரு பெரும் அனுபவத்தில் மூழ்கியபடியே இதை எழுதுகிறேன். விஜயநகர பேரரசின் தலைநகராக விளங்கிய ஹம்பியை சுற்றிக்கொண்டு இருக்கிறேன். விட்டலா கோயிலுக்குப் பின்னால் துங்கபத்ரா நதியைக் காண வந்தேன். இங்கே புரந்தரதாஸர் மண்டபம் என்று ஒன்று இருப்பதாக அறிந்தேன்.
“இங்கதான் அவரு உக்காந்து நெறய compose பண்ணாராம். வருஷத்துல ஏதோ ஒரு நாள், அவரு பொறந்த நாளுன்னு நினைக்கறேன், அவர follow பண்றவங்கலாம் இந்த மண்டபத்துல உக்காந்து பாடுவாங்களாம்” என்று உடன்வந்த ஒருவர் தகவல் கக்கினார்.
ஹம்பிக்கு முன்னொருமுறை வந்திருந்தபோது, என் ஆசிரியர் சொன்ன ஒன்றை நினைவில் வைத்துக்கொண்டே இந்த நகரத்துச் சிதலங்களை சுற்றிப் பார்த்தது நினைவுக்கு வருகிறத– “ஹம்பில இருந்தப்போ என்ன பெரிய அளவுல ஆட்கொண்ட உணர்வு என்ன தெரியுமா? நான் நடக்கற இதே தெருவுல என்னிக்கோ ஒரு நாள் புரந்தரதாஸரும் நடந்துருப்பாரு, என்ன சுத்தியிருக்கற பாறைங்களெல்லாம் அவரு பாட்ட கேட்டுருக்கும். ஏன், இப்போ நா நிக்கற இந்த பாறை மேல அவரு உட்கார்ந்து பாடியிருக்கலாம். இந்த யோசனையே என்ன எதோ பண்ணுச்சு. புரந்தரதாஸர் வாழ்ந்த ஒரு ஊர்ல நானும் கொஞ்ச நேரம் இருந்துட்டு வந்தேன்றதே என் ஹம்பி பயணத்துல ஒரு மறக்க முடியாத அனுபவம்”. (அவர் ஒரு புரந்தரதாஸப் பிரியர் என்று உங்களுக்கே புரிந்திருக்கும்).
இந்தச் சொற்கள் காதில் ஒலித்தபடியே நான் ஹம்பியை வலம் வந்த ஞாபகம் நினைவுக்கு வருகிறது. அந்த முறை, புரந்தரதாஸருக்கென்று அறியப்படும் இடங்கள் எதையும் காண முடியவில்லை. இம்முறை, எதிர்பாராத விதமாக அது வாய்த்திருக்கிறது.
துங்கபத்ரா நதிக்கரையின் ஓரத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் அந்த மண்டபத்தை நோக்கி நடக்கிறேன். அதன் மேலே ஒரு காவிக் கொடி பறப்பது தெரிகிறது.
“அடப்பாவி, இங்கேயும் கொடிய பறக்க விட்டுட்டானுங்களா!” என்று மீண்டும் கக்கினார் சகப்பயணி.
தம்புராச் சத்தம் கேட்பதுபோல் நதியோட்டம் கேட்கிறது. தம்புராச் சத்தத்தில் ஒட்டுமொத்த இசையும் ஒளிந்துகொண்டு இருப்பதுபோல் தோன்றும். அப்படி, ஒரு பாழடைந்த நகரத்தின் பெருங்கனவுகளின் ஓசை இந்த நதி வெள்ளத்தில் கேட்கிறது. மண்டபத்தின் தூண்களுக்கிடையில் நதியோட்டம் தெரிகிறது. சட்டென்று பசவண்ணா நினைவுக்கு வருகிறார்–
“The rich
will make temples for Śiva.
What shall I,
a poor man,
do?My legs are pillars,
the body the shrine,
the head a cupola
of gold. (5)Listen, O lord of the meeting rivers,
things standing shall fall,
but the moving ever shall stay. (10)–Basavanna 820 (Translation from A.K. Ramanujan’s Speaking of Siva)”
இந்த வசனத்தின் கடைசி வரி என்னைப் பலமுறை புரட்டிப்போட்டு இருக்கிறது– “நிற்பவை விழும், நகர்பவை என்றும் இருக்கும்”. கிட்டத்தட்ட ஒரு மறைமொழிபோல் ஒலிக்கிறது இந்த வரி. பசவண்ணா சொல்வது ஹம்பிக்கு சரியாகவே பொருந்தும். இந்த நகரமே பலவற்றை நிற்கவைத்து விடவேண்டும் என்று எடுக்கப்பட்ட ஒரு பெரும் முயற்சிதான். நிற்க வைக்கப்பட்ட ஆலயங்கள், மண்டபங்கள், கோபுரங்களெல்லாம் சிதலங்களாகக் கிடக்கிறது. இந்த நகரத்தில் நிற்காத துங்கபத்திரை இன்றும் ஓடிக்கொண்டே இருக்கிறது.
நகரச் சிதலங்களுக்கு மேலே அந்த நதி ஓடிக்கொண்டு இருப்பது பசவண்ணா குறிப்பிடும் அந்த நிரந்தர இருத்தல் போல் இருக்கிறது. சட்டென்று ஒரு புல்லரிப்பு. உடல் குலுங்குகிறது. ஒரு நொடி நடப்பதை நிறுத்திவிட்டு நிற்கிறேன். நிற்பவைதான் வீழுமே! நானும் ஒரு நாள் வீழத்தான் போகிறேன். என்னைப்போல் எத்தனையோ பேர் இந்த மண்ணில் நின்று, வீழ்ந்துதான் இருக்கிறார்கள். எத்தனையோ பேர் இந்த நதிக்கரையில் வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள். அத்தனை பேரையும் பார்த்தபடி இந்த நதி ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. எத்தனை ஆண்டுகளாய் ஓடிக்கொண்டு இருக்கிறதோ? யாருக்குத் தெரியும்? அதற்கு சலிக்கவே சலிக்காதா? நதியில் ஒரு கொக்கு நின்றுகொண்டு இருக்கிறது. அதுவும் எத்தனைமுறை இதே நதியில் நின்று இப்படி மீன் பிடித்து இருக்கும்? அதற்கு சலிக்கவே சலிக்காதா? இயற்கையில் எதற்கும் சலிப்பு என்ற உணர்வே இல்லை. இயற்கையில் எதற்கும் அதன் இருத்தல் அலுப்பதே இல்லை. அதேவேளை, இருத்தலில் அவற்றுக்கு பெரிய இன்பங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. என்னைப் போல் நதிக்கரையில் உட்கார்ந்துகொண்டு இப்படி பேரானந்தம் அடைய கொக்கோ கரடியோ இல்லை. அவற்றுக்கு சலிப்போ இன்பமோ இருப்பதாகத் தெரியவில்லை. இருத்தல் மட்டும்தான் இருக்கிறது.
இவை இரண்டும் மனிதனின் உணர்வுகள். இயற்கையில் வேறு எதுவும் இவற்றை உணர்வதாகத் தெரியவில்லை. மனிதன் இவற்றை உணர்வது இயற்கையின் பிழையோ, அவன் பிழையோ இல்லை. இயற்கையில் ஒவ்வொன்றிற்கும் ஒரு தனித்துவமான குணம் இருப்பதுபோல், சலிப்பையும் இன்பத்தையும் உணர்வது மனிதனுடைய குணம். இதை மறுப்பதே மனிதனின் பிழை என்று தோன்றுகிறது. இதை ஏற்றுக்கொண்டு கடக்க முயற்சிப்பதற்கும், இதை மறுத்து வாழ்வதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. இதை மறுத்தல் மனித வாழ்வின் அடிப்படை அனுபவங்களை நிராகரித்தல் என்று ஆகும். ஒரு இயல்பைக் குலைக்கிறது. இதை ஏற்றுக்கொண்டு கடக்க முயற்சித்தல் முதலில் அந்த உணர்வுகளிடம் நம்மை ஒப்படைக்கிறது. இயற்கையில் உயிர்கள் தத்தம் இயல்புகளில் வாழ்வதுபோல். இந்த ஒப்படைப்பு இவ்வுணர்வுகளை அந்த தனிமனிதனுடைய வசத்தில் கொண்டுவருகிறது, அவன் அனுபவங்களை நிறைக்கிறது. அனுபவங்களின் திரட்சியில் அவன் அதைக் கடக்கும் வல்லமை பெறுகிறான். இந்த உணர்வுகளைக் கடந்த நிலையில் அவன் இருக்கத்துவங்குகிறான். நிரந்தரமாக இங்கு இருப்பவற்றோடு சேர்கிறான்.
நதியோட்டத்தை பார்த்த சில நொடிகளிலேயே இத்தனை எண்ணங்கள் தோன்றுகிறது. சட்டென்று புரந்தரதாஸர் மீண்டும் நினைவுக்கு வருகிறார். இங்குள்ள எவையெல்லாம் அவர் பாட்டைக் கேட்டிருக்கும் என்று சுற்றிப் பார்க்கிறேன். அந்த மரம்? இல்லை, அதற்கு அத்தனை வயது இருக்காது. அந்த கொக்கு? இல்லை, அதற்கு என் வயதே இருக்காது. அந்த பாறை? ஆம்! இந்த நதி? ஆம்! இந்த நதிதான் தம்பூரா ஓசைபோல் அவர் இசையை அமைத்திருக்குமோ? மீண்டும் புல்லரிப்பு. நதி அருகே போய் பார்க்கிறேன். ஆறு என்ற பெயருக்கேற்றாற்போல் பாறைகளை அறுத்துக்கொண்டு ஓடுகிறது. இந்த நகரை அறுத்துக்கொண்டு ஓடுகிறது. நீர் சூழலால் பாறைகளில் ஏற்பட்ட குழிகள் தெரிகிறது. ராகத்தின் ஓட்டத்தில் ஒரு ஸ்வரத்தின் சஞ்சாரம் நினைவுக்கு வருகிறது. புரந்தரதாஸரின் ஜகதோதாரணா பாடல் நினைவுக்கு வருகிறது. நீர் சுழல்கள்போல் அந்த பாட்டிலும் எத்தனை ஸ்வர சூழல்கள். அதிலும் “புரந்தர விட்டலனா” என்ற அவர் முத்திரை வரி பெரிய சூழல்தான்! விழுந்தால் பிழைப்பது மிகவும் கடினம்.
அவர் அந்த பாட்டை இந்த மண்டபத்தில் உட்கார்ந்து அமைத்திருப்பாரோ? வாய்ப்பு இருக்கிறது. மீண்டும் உடல் புல்லரிக்கிறது. அந்த பாட்டு ஒரு பெரும் படைப்பு. கிருஷ்ணனை ஒரு வீட்டின் குழந்தையாய் பார்த்து, அதே கிருஷ்ணனை அணுவினும் சிறியதுவாய், பெரிதினும் பெரியதுவாய் பார்க்கிறது. ஒரு சில வரிகளில் கிருஷ்ணன் எனும் ஒரு பொருள் உலக உறவுகளிலிருந்து ஒரு பிரபஞ்ச இருப்பாக உயர்த்தப்பட்டு, அந்த இருப்பை தன் வசம் வைத்திருக்கும் யசோதையை பாடுகிறது. இந்த உயர்த்தல் தாழ்த்தலுக்கும், வளைவு நெளிவுகளுக்கும் புரந்தரதாஸரின் காபி ராகம் வளைத்துக் கொடுத்து, ஒரு கட்டத்தில் உயர்ந்து நிற்கிறது. இங்கெல்லாம் பயணித்துவிட்டு பாட்டு “புரந்தர விட்டலனா” என்ற வரியை வந்தடையும்போது ஒரு பெரும் பயணத்தின் உச்சத்தில் கிடைக்கும் அமைதி கேட்கிறது.
சுற்றிப் பார்க்கிறேன். பாறைக் குவியல்களாய் பல குன்றுகள், மரங்கள், பேரரசின் காலத்து கட்டுமானங்களின் சிதிலங்கள். அந்த சிதலங்களைப் பார்க்கும்போதுதான் புரந்தரதாஸர் காலத்து ஹம்பி நமக்கு நினைவுக்கு வருகிறது. இப்போதிருக்கும் காலித்தோற்றம் அதற்கு அப்போது இருந்திருக்காது. அது ஒரு மாநகரம், ஒரு மாபெரும் பேரரசின் தலைநகரம். எத்தனை மனிதர்கள் இந்த இடங்களில் நிறைந்திருப்பார்கள்? எத்தனை செயல்பாடுகள் இருந்திருக்கும்? அப்படி ஒரு மனிதக்குவியலில் ஒருவனுக்கு ஏன் இறைச் சிந்தனை வந்திருக்கும்? இந்த தலைநகரில், இத்தனை அழகான நதிக்கரை மண்டபத்தில் ஒருவன் ஏன் கிருஷ்ணனைப் பற்றி பாடவேண்டும்? இங்கே கிருஷ்ணனுக்கு என்ன வேலை? கடவுளுக்கு என்ன வேலை? இந்த நகரத்தில் இருந்தவர்களுக்கு ஏன் கடவுள் தேவைப் பட்டது? மனிதனுக்கு ஏன் கடவுள் தேவைப்பட்டது?
Albert Camus சொன்ன ஒரு வரி நினைவுக்கு வருகிறது– “எனக்கு கனவு காண்பவர்களையும், இடையறாது தங்களிடமே பேசிக்கொள்பவர்களையும் பிடிக்கும். அவர்கள் இருமைகள். அவர்கள் இங்கிருக்கிறார்கள், வேறெங்கும் இருக்கிறார்கள்”.
ஹம்பியில் இருந்தவர்களெல்லாம் இங்கு மட்டும்தான் இருந்தார்களா? இந்த ஊரே ஒரு பெருங்கனவை நிற்கவைக்க ஏற்பட்ட ஒரு பெருமுயற்சிதானே. அப்படியென்றால், இங்கே வாழ்ந்த எல்லோருக்கும் அந்தக் கனவில் ஒரு பங்குண்டு. அவர்களும் கனவு காண்கிறார்கள். ஒரு கனவு நகரத்தில் இருந்தபடியே அவர்களின் கனவை காண்கிறார்கள். அவர்கள் இங்கும் இருக்கிறார்கள், அவர்கள் கனவிலும் இருக்கிறார்கள். இங்கே திரள் திரளாய் இருந்தாலும், அவர்கள் கனவில் தனியாகத்தான் இருக்கிறார்கள், தனித்துவிடப் படுகிறார்கள். இது ஒரு வகையில் மனிதனுக்கேயான நிலை என்றே சொல்லலாம். அவள் இங்கு இருக்கிறாள். வேறெங்கும் இருக்கிறாள். இன்பமும் சலிப்பும் அவளின் இந்த இரு இருத்தல்களுக்கிடையே புணற்ச்சிபோல் நிகழ்கிறது.
மனிதனின் இந்த இரண்டாம் இருத்தல் பெறுகப் பெறுக, அவன் தனித்துவிடப் படுகிறான். தனிமையில், ஒன்று அவன் அவனையே தொலைக்கிறான், அல்லது அந்த கனவை தொலைக்கிறான். இல்லையேல், தன்னையே அந்த கனவாக்கிக் கொள்கிறான். கனவோடு அவனும் வளர்கிறான். கனவாகவே வளர்கிறான். அந்தக் கனவை இந்த உலகில் பகிர்கிறான். கடவுள் செய்கிறான். மனிதன் கண்ட ஒரு பெருங்கனவு கடவுள். அந்தக் கனவை இந்த உலகத்தில் விரிக்கிறான். எல்லாவற்றிலும் உள்ள உள்ளொளிபோல் அது தெரிகிறது. பெரும் அனுபவங்களை அது நிகழ்த்துகிறது. இதோ இதைப்போல்!
இந்தப் பேரனுபவங்களைப் பெரும் மனிதனுக்கு ஏன் படைக்க வேண்டும் என்று தோன்றுகிறது? இந்த அனுபவத்தை பெரும் நான் ஏன் இதை எழுதுகிறேன்? இங்கே உட்கார்ந்துகொண்டு ஏன் புரந்தரதாஸர் பாடுகிறார்? இந்த ஊரார் ஏன் கோயில் கட்டினார்கள்? சிற்பங்கள் வடித்தார்கள்? அன்றாடம் வாழும் மனிதனுக்கு ஏன் எதையோ படைக்க வேண்டும் என்று தோன்றுகிறது? அந்த உந்துதல் அவளுக்கு எங்கிருந்து வருகிறது?
ஏன் வருகிறது? நிற்கும் அனுபவங்களை நகர்த்தவா? தன்னை அந்தக் கனவால் நிறைத்துக் கொள்ளவா? படைத்துப் படைத்து தானும் கடவுளாகவா?