ஒரு ஊரில் ஒரு காதல் ஜோடி இருந்தார்கள். பிரிவே அவர்கள் காதல் மொழி. ஒரு நாளுக்கு ஒரு முறை “ I love you !” சொல்லாவிட்டாலும், மாதத்திற்கு இரு முறை Breakup செய்து கொள்வது அவர்கள் வழக்கம். “காத்திருந்து காண்“ என்ற வாசகத்தை சற்றுக் கூடுதலாகவே நடைமுறைப் படுத்தியவர்கள். இப்படியெல்லாம் சொல்வதால் அது ஏதோ ஒண்ணேகால் ரூபாய் காதல் என்று எண்ணிவிட வேண்டாம்.
“இதை யாம் எப்போது படைத்தோம்?“ என்று கடவுளரே கண்டு வியக்கும் காவியக்காதல். அப்புறம் என்ன பிரிதல் நிமித்தம் இவர்களுக்குள் என்று நாம் யோசிக்கலாம். வாஸ்தவமான யோசனைதான். காரணம் மிக எளிதானது. எல்லாக் காதலர்களும் ஒரு காதல் வாசகம் செல்வார்கள் - “உன் துணையில் நான் கரைந்து விடுகிறேன் “ என்று. அதுதான் இவர்களுக்கும். ஆனால், மற்ற காதலர்களிடம் இல்லாதபடி இவர்களுக்கு மட்டும் அது ஆபத்தாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் இவர்களிடத்தில்தான் அது உண்மையாகவே நடக்கிறது.
இதைத் தவிர இன்னொரு காரணமும் உண்டு - பித்தம். பித்த சீர்கேடு ஓர் காதல் தடை. அதைப் பற்றி யாரும் பெரிதாய் பேசுவதே இல்லை. நம் கதாநாயகர்களில் ஒன்று தத்துவப் பித்து, இன்னொன்று சாதாப் பித்து. தேநீர் விடுதிகளில் ஸ்பெஷல் இஞ்சி, சாதா இஞ்சி என்று இரண்டு வகையினங்கள் இருக்குமே, அதுபோலத்தான்.
இப்படித்தான் ஒருமுறை நமது கதாநாயகர்கள் கைகோர்த்து நகர்வலம் வரும்போது, நம் நாயகிக்கு ஒரு சந்தேகம். “நான் ஒரு புழுவாக மாறினாலும் நீ காதலிப்பாயா?” என்று நம் நாயகனிடத்தில் கேட்டாள். “It is interesting you brought this up” என்று நம் கதாநாயகன் பதில் சொல்லத் துவங்கினான்.
“ஒரு மனிதன் ஒரு வண்டாகவோ, புழுவாகவோ, பூச்சியாகவோ உணரும் மனநிலையைப் பற்றி Franz Kafka அவரது metamorphosis புத்தகத்தில் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் வரும் கதாபாத்திரம் தான் ஒரு கரப்பான்பூச்சியாக மாறுவதையும், அதைத் தொடர்ந்து ஏற்படும் நிகழ்வுகளைக் காண்பதையும், அதனால் ஏற்படும் உளவியல் மாற்றங்களையும் மிக நுணுக்கமாக பதிவு செய்கிறது. நீ அதைப் படித்துப் பார். அது ஒரு அழகான இலக்கியப் படைப்பு. ஆனால் அந்த கதாபாத்திரம் ஒரு கரப்பான் பூச்சியாக உணரும் காரணம், அவனுடைய மனிதத் தன்மையை யாரும் பொருட்படுத்தாதுதான். Neglect is the main reason. அது உனக்கு ஆகாமல் நான் பார்த்துக் கொள்வேன். நீ புழுவாக மாற விடாமல் உன்னைக் காதலிப்பேன்!” என்று சொல்லி அவள் கண்களைப் பார்த்தான்.
அவை சினங் கக்கின.
“அப்படினா, நா புழுவா மாறினா, நீ என்ன காதலிக்க மாட்ட, அப்படித்தானே?“ என்று நம் கதாநாயகி கேட்டாள்.
“அப்படி இல்லம்மா” என்று நம் நாயகனும் குழைந்தபடியே கை வருடினான். கையை உதறிவிட்டு அவளோ முன்னே நடந்தாள்.
“இப்போ நா என்னம்மா சொல்லிட்டேன் ?” என்று கேட்டபடியே நம் நாயகனும் தொடர்ந்து பின்னே நடந்தான்.
அப்புறம் என்ன?
Breakupuhhh…
காலம் கொஞ்சம் காக்க வைத்தது. முருங்கை மரம் ஏறிய வேதாளம் மீண்டும் விக்ரமாதித்தன் முதுகில் ஏறியது. அப்போது ஒருநாள் நம் கதாநாயகர்கள் காபிகடை காதல் செய்து கொண்டிருந்தார்கள். “ஒரு relationshipக்கு எது முக்கியம் தெரியுமா?” என்று நம் கதாநாயகி கேட்டாள்.
“தெரியலியே , எது மா? “ என்றான்.
“Understanding. அதுதான் முக்கியம். அதனால நாம ஒருத்தர ஒருத்தர் understanding பண்ணிக்கணும்“ என்றாள்.
“It is interesting you brought this up”என்று மீண்டும் ஆரம்பித்தான். “Human understandingஐப் பற்றி Immanuel Kant மிகவும் சுவாரசியமான கருத்துகளை முன்வைத்திருக்கிறார்” என்று, ஒரு குழந்தையின் உடலில் தத்துவவாதியின் ஆவி புகுந்ததுபோல் பேச துவங்கினான்.
“அவரைப் பொறுத்தவரை, realityயை நாம் இரண்டாக புரிந்து கொள்ளலாம். ஒன்று noumenon மற்றொன்று phenomenon. இதில் phenomenon என்பது மனிதர்களாகிய நாம் இந்த நிஜத்தை புரிந்து கொள்ளப் பயன்படுத்தும் Apparatusக்கு புலனாகும் reality. உள்ளது உள்ளபடி நிஜம் எவ்வாறு இருக்கிறதோ அதுவே noumenon. According to Kant, the noumenon is forever concealed to human understanding. Kantஇன் இந்த argument உலக சிந்தனையிலேயே மிகவும் முக்கியமானது என்றே சொல்லலாம் . அதன்படி பார்த்தால், உள்ளது உள்ளபடி உன்னால் என்னையும், என்னால் உன்னையும் புரிந்து கொள்ளவே இயலாது. Our truths are forever concealed to each other. இங்குதான் Kant நம்பிக்கையைப் பற்றிப் பேசுகிறார். Kantஇன் காலத்திற்கு முன்னாலோ, பின்னாலோ வேறு யாரும் நம்பிக்கையைப் பற்றி அவ்வளவு அழகாக பேசியதே இல்லை.
Kant rationally validates faith!
நீ ஒரு முறை Kant யை வாசித்து பார். Understanding ரொம்ப குறுகியது தான். நம்பிக்கை அப்படி இல்லை. அதனால, நாம ஒருத்தர ஒருத்தர் நம்பலாம் தங்கம்!” என்று முடித்தான்.
இதைக்கேட்டு அவள் சட்டென்று நாற்காலியில் இருந்து எழுந்து ,காபிகடையை விட்டு வெளியே நடந்தாள். நாயகனும் பின் தொடர்ந்து சென்றான்.
“என்ன ஆச்சுமா, ஏன் கோச்சிகிட்டு போற?” என்று கேட்டான்.
“நா எவ்வளவு ஆசையா நம்ம ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்கலாம்னு நெனச்சு வந்த, நா சொல்றத நீ கேக்கவே மாட்ற…என்ன எப்பவுமே discourage பண்ணிக்கிட்டே இருக்க” என்று சீறினாள்.
“அப்படி இல்லம்மா “ என்று கதாநாயகனும் குழைந்தான்.
அப்புறம் என்ன?
Breakupuhhh…
அடுத்த முறை முருங்கமரம் செல்வதற்கு முன்னால், தன்னைச் சற்று தயார் செய்து கொள்ள வேண்டும் என்று விக்ரமாதித்தன் உணர்ந்தான். தன் நாயகியோடு தன்னால் ஏன் பேசவே முடிவதில்லை என்ற கேள்வி அவனைப் போட்டு குடைந்தது.
இதற்கு பதில் தேட அவன் Michel Foucault இன் Archeology of knowledgeயை எடுத்து வைத்துக் கொண்டான். புரட்டிப் புரட்டிப் பார்த்தான்.
வேதாளம் மீண்டும் முதுகு திரும்பியது.
ஒரு பூங்கா பெஞ்சில் நமது அடுத்த காட்சி.
“நாம பேசிக்காத timeல நம்ம பத்தி நீ யோசி்ச்சியா?” என்று கேட்டாள்.
“ஆம்“ என்று தலையசைத்தான்.
“அப்படியா? நானும் யோசிச்சேன்! ஆமா, நீ என்ன யோசிச்ச?” என்று கேட்டாள்.
“நம்மளால ஏன் ஒழுங்கா பேசவே முடியறது இல்லன்னு யோசிச்சேன்“ என்றான்.
“ஆ! என்ன யோசிச்ச?”
“Michel Foucault ன்ற writer எழுதிய Archeology of knowledge என்கிற புத்தகம் படித்தேன். அது ஒரு சுவாரசியமான புத்தகம். நா உனக்கு birthdayக்கு வாங்கிதர்றேன். படி! அந்த புத்தகத்தில் அவர் தன்னை Weltanschawang இன் எதிரி என்று அழைத்துக் கொள்கிறார். Weltanschauung என்பது ஒரு ஒட்டுமொத்த உண்மைக் கட்டமைப்பை குறிக்கும் சொல்லாகப் புரிந்து கொள்ளலாம். அப்படி ஒரு கட்டமைப்பே இல்லை என்பதுதான் Foucaultஇன் வாதம். அவரைப் பொறுத்தவரை உண்மையை நோக்கிய மனித சிந்தனையின் பயணம் ஒரு சீரான cumulative process இல்லை. காலப்போக்கில் ஆங்காங்கே எழுந்த சிந்தனைக் கட்டமைப்புகளின் விளைவுதான் மனித சிந்தனையின் உண்மை எனும் கருத்து. அவரைப் பொறுத்தவரை உண்மை என்பதே அந்தக் கட்டமைப்பின் விளைவுதான். ஆக, அந்தக் கட்டமைப்பு இல்லாமல் உண்மையே இருக்க முடியாது. கட்டமைப்புகள் வெவ்வேறாக இருக்கும்வரை உண்மையும் ஒன்றாக இருக்க முடியாது. அதனால், நீ சொல்வதெல்லாம் உன் கட்டமைப்பின் விளைவுகள். அது எனக்கு உண்மை இல்லை. “
இதை அவன் சொல்லி முடிப்பதற்கு முன்பே, அவள் பெஞ்சிலிருந்து எழுந்து நடக்கத் துவங்கிவிட்டாள். அவள் ரௌத்திரம் பழகிய அளவிற்கு ரௌத்திரமே தன்னை பழகியிருக்காது.
அப்புறம் என்ன,
Breakupuhhh…
கொஞ்ச காலம் கழிந்தது. காவியத்தின் அடுத்தக் காட்சி.
“நா அன்னிக்கி அப்படி எழுந்து போயிருக்கக் கூடாது.நீ ஏதோ சொல்ல வந்த. அத நா கேக்கவே இல்ல“ என்றாள்.
“என்னால ஏன் அப்படி பொறுமையா நீ சொல்றத கேக்கவே முடியல?” என்று கேட்டாள்.
“Interesting question ,நம்ம பேசாத நேரத்துல நா Nietzsche எழுதின Genealogy of Morality னு ஒரு book படிச்சேன். அது ஒரு அற்புதமான புத்தகம். நா சிந்திக்கற விதத்தையே அது மாத்திடுச்சு“.
“அப்படியா, அதுல என்ன படிச்ச?” என்று ஆர்வத்துடன் கேட்டாள்.
“மதங்கள் சமூகத்தினில் வலுவிழந்து போன காலத்தில் அறத்தைப் பற்றியும், அறச் சிந்தனைகளைப் பற்றியும் எழுதுகிறார். அவர் காலம் வரை மதமே அறச் சிந்தனையின் அடித்தளம் அமைத்தது. கடவுளும், பாவ புண்ணிய கணக்குகளுமே அறத்தின் அளவுகோலாக இருந்தது. ஆனால், மதங்கள் வலுவிழந்து போன காலத்தில், அறத்திற்கு எது அடித்தளம் என்பதே அந்த புத்தகத்தின் மைய சிந்தனை. அதில் slave morality, aristocratic morality…என்றெல்லாம் பல கருத்துகளைப் பற்றி பேசிவிட்டு, இறுதியாக அவர் என்ன conclusion arrive பண்றாரு தெரியுமா? The primal instinct for men is to inflict pain on others. அதத்தான் நீ எனக்கு பண்றனு நா நினைக்கி…”
Breakupuhhh…
அவர்கள் ஒரு தொடர்கதை
— அயலவன்