
எல்லோருக்கும் பொதுவான உறவு
தனிமை எனப் பெயர் கொண்ட பேரழகியே!
எல்லோர் வாழ்க்கையிலும் நீ துணை நிற்கிறாய்,
கற்றவன், கல்லாதவன்,
உற்றவன், அல்லாதவன்,
பெற்றவன், பெறாதவன்,
உயர்ந்தவன், தாழ்ந்தவன்,
பாமரன், உய்த்தவன்,
என்ற பேதங்கட்க்கப்பால்!
உன்னால் பிரிந்த மாநிதிக்கூட்டத்தை
நீயே சேர்த்து மகிழ்கின்றாய்.
சிலருக்கு பேரழகியாய், பெருகும்பிணியாய்,
அரிய பொருளாய், தெளிவற்ற பள்ளமாய், அமைதியின் குன்றாய்,
பல முகம் கொண்டு திகழ்கிறாய் நீ!
பல நூறு உறவுகள் புடைசூழ இருப்பினும்,
உன்னை நாடி ஓடுவோரும் உண்டு.
படுக்கையில்கூட உன் நிர்வாணத்தை அஞ்சி,
துணை நாடியோடுவோரும் உண்டு!
அஞ்சியோடும்பொழுது பின்வந்து முழிக்கிறாய்,
நாடியோடி வருகையில் தேற்றியணைத்து சிரிக்கிறாய்,
தெளிவோடு இருக்கையில் புதிராய் நின்று குழப்புகிறாய்,
ஏதும் விளங்கா வேளையில் விளக்கிச் சொல்லி மகிழ்கிறாய்!
உண்மையில் நீ யார் என் பேரழகியே?
நிரந்தர உறவா? யாருமற்ற தீவா?
உவ்வுலகிலே புழங்குகின்ற பலநூறு “நான்"களின்
மைய்யத்திற்கும் எல்லைக்கும் நடுவில் உள்ள வெளியா?
– அயலவன்