
சாகுங் கடவுளும்
சாகாக் கடவுளும்
ஒன்றையொன்று தழுவியபின்
இறப்பென்ன பிறப்பென்ன
குணமென்ன நலமென்ன
சொல் மனமே!
பூணும் உடைகளும்
அதைப்பேணும் உடல்களும்
வெவ்வேறன்று என்றானபின்
நூலென்ன ஊணென்ன
மெய்யென்ன திரிபென்ன
சொல் மனமே!
நாளும் தீஞ்செய்து
வீழும் பகைவரை ‘
கொல்லும் கயவருக்கு
அறமென்ன நெறியென்ன
சரியென்ன தவறென்ன
சொல் மனமே!
படைக்கும் பொருளொன்றும்
படைத்த பொருளொன்றும்
ஒன்றுதான் என்றேயானபின்
இறையென்ன நிலையென்ன
மதியென்ன கதியென்ன
சொல் மனமே!
பாடும் குரல்வளையும்
அதைநாடும் செவிகளையும்
ஒருவனே கொண்டுள்ளபின்
பாடலென்ன நாடலென்ன
தேடலென்ன கொளலென்ன
சொல் மனமே!
நிலையான பொருளொன்றும்
நிலையற்ற பொருளொன்றும்
ஒன்றாய் யாவுமாயானபின்பு
ஆக்கமென்ன அழிவுமென்ன
கலவியென்ன கடையுமென்ன
சொல் மனமே!
தோன்றிய பொருளொன்றும்
தோன்றிடாப் பொருளொன்றும்
நாடுவதொன்றுதான் என்றபின்பு
அதுவென்ன இதுவென்ன
வேறென்ன ஒன்றென்ன
சொல் மனமே…
— அயலவன்