
சஞ்சாரத்தின் சப்தங்களுக்கு இடையில்,
அமைதியில் கனக்க ஆசையுண்டு.
மகோன்னதங்கள் முன்னெழுகையில்,
மௌனத்தில் மேவிட விருப்பமுண்டு.
விருப்பு வெருப்புகளுக்கு அப்பால் நீளும் விண்வெளியில்,
நிசப்தத்தில் நிறைந்திட ஆர்வமுண்டு.
ஈரப் புன்னகைகளை தொடரும் இருள் பரப்பில்,
மொழியறுத்து மோகிக்க ஏக்கமுண்டு.
நற்செயல் தீஞ்செயல் கடந்து,
வினையாற்றி வீழ்ந்திட வேட்டலுண்டு.
சாகும் நொடி தொடரும் இன்மையின் பள்ளத்தில்,
பறந்து திரிந்திட நாட்டமுண்டு…
— அயலவன்