
கோடைகால இரவொன்று,
வெக்கையால் வாடிய மனத்தை
தக்கையான உடலொன்று சுமந்து நடந்திட,
ரயில்கள் அலைமோதும் தண்டவாளக்கரையில்,
மைல்கள் கடந்திடும் மானிடர் தம்
செயல்கள் மறந்து புன்னகையொன்று பகிர்ந்திட,
என் வாழ்க்கையில் ஒளியேற்றும் ஒரு மின்விளக்கு!
ஒருவர் தனிமையை மற்றவர் போக்கிட,
கைவிரித்துக் காத்திருக்கும் தகர மேசை!
துள்ளிய விளக்கொளியால்
மெல்லியக் குரலொலியால்
வருடிடும் இளங்காற்றசைவால்
நினையும் இந்த ரயில் நிலையம் யாருக்கு சொந்தம்?
யாருடையதாய் இருந்தால் என்ன?
அதன் உடைமைப் போல அழகும் பொதுவே!
எல்லோற்கும் வாய்த்திடும் சிற்றின்பமோ,
எல்லோரும் புழங்கிடும் ரயில் நிலையமோ,
பொதுமையே அதன் பேரழகு…
— அயலவன்