பிணத்தோடு போகும் இரகசியங்கள் எத்தனை
அதன் தனிமை எவ்வாறு இருந்திருக்கும்?
அதற்கும் ஒரு தனிமை உண்டென்று அது உணர்ந்திருக்குமா?
உணர்தல் என்ன செய்தது?
கலை சமைத்ததா?
மலை காடு சென்றதா
அதற்கு வானம் பார்க்கும் பழக்கம் உண்டா?
பல கோடி விண்மீன்களுள் அது தன்னை கண்டிருக்கிறதா?
இசைக்கு சிலிர்த்திருக்கிறதா
அன்பை சுவைத்திருக்கிறதா?
அதை அசைபோட்டு அனுபவித்திருக்கிறதா?
கடல் அலை முத்தம் பெற்றதா
மலை மேகத்திற்கு தூது விட்டதா
காலத்தை பகடி செய்திருக்கிறதா?
யார் துணையிலாவது தன்னை இழந்திருக்கிறதா?
அதற்கு இதுதான் முதல் சாவா?
மரணத்தை கண்டிருக்கிறதா?
எப்பொழுதாவது செத்திருக்கிறதா
தன் அம்மணத்தை பார்த்திருக்கிறதா?
நிஜம் கண்டு நடுங்கியிருக்கிறதா?
நிஜம் காணாது நடுங்கியிருக்கிறதா?
தன் சாவை பகிர்ந்திருக்கிறதா?
தன் சாவைக் கடந்தும் எதையாவது கண்டிருக்கிறதா?
அந்தப் பிணத்தின் கதையை எனக்கு யார் சொல்வது?
— அயலவன்