
உற்றார் உடல் நீத்தார் என அவர் நிழல் வாழ்ந்த மற்றார் உரைக்க, அம்மக்களை தேற்றார் யாரும் இல்லாதததால் ஓட்டமாய் ஒரு பயணம்.
நீங்கிய உயிருக்காக துயரங் கொஞ்சம்,
அது நீக்கிய உலகுக்காக துயரங் கொஞ்சம்,
தாக்கிய வேகத்தினால் துயரங் கொஞ்சம்,
தேக்கியே வைத்திருந்த துயரங் கொஞ்சம்
பாக்கியும் இருந்தது துயரங் கொஞ்சம்.
சோகத்தின் படலங்கள் தேகம் நினைக்க, விழியில் விரைந்தது வெந்நீர் துளி.
உலகை மறைத்தது சோகப் புனல், அண்டமே வேதனையில் அடங்கியது.
சிரிக்கும் சிறுமியுள்ளும் சோகங் கொஞ்சம்,
உறங்கும் நாயினுள்ளும் தாபம் கொஞ்சம்,
பாரே என் பார்வையில் சோகமயமானது!
பார்ப்பவரின் படலங்கள் பார்வையின் பண்பையே பாதிக்கும் மாயத்தை எண்ணி வியக்கையில்,
துயரத்தின் துவாரங்கள் திருந்துக்கிடந்த அகவாயிலில், வேதனையே உருவான உறவினர்கள்.
ஓ! என்ற குரல்கள் சில,
ஓலமாய் ஒலித்த குரல்கள் சில,
உலுக்கிப் பார்க்கும் குரல்கள் சில,
உருகியழும் குரல்கள் சில.
விருப்பில்லாது விலகிவிட்டான், பொறுப்பில்லாது போய்விட்டான்,
உடலைப் பேணாது மாண்டுவிட்டான்,
உபாதை உரைக்காது மடிந்துவிட்டான், என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில்,
பயணம் முடித்த பெருங்கலம்!
சமூகத்து உறவுப் பின்னலில் எங்கோ சிக்கியிருந்த அன்பை தோண்டி வந்தளித்த உறவினர்கள்!
உணர்ச்சிகள் அலைமோதிய வீட்டினுள்ளே, பெருங்கலத்தை வழியனுப்ப வந்த பெருந்திரள் ஓலமிட,
கிணற்றிடி மட்டும் காத்திருந்தது, தேற்றியணைக்கும் கரங்களோடு, தான் உட்டி வளர்த்த மகனின் நள்ளிரவு நாதத்திற்காக…
— அயலவன்