
கல்லூரி நண்பனுடன் பள்ளிநாள் அனுபவங்களை பக்குவமாய் பேசிய தருணங்கள்.
வந்திருந்த பாதையில் கண்டிருந்த காட்சியில் பொதிந்திருந்த ஒற்றுமையை பேசி நகைத்த பொழுதுகள்.
வேற்றுமைகள் இருப்பின் அகற்றிவைக்கப்பட்டன, உரையாடலின் தற்காலிக சுவை கூட்ட.
டயப்பர் போடும் நாள்முதல் தினம் அடித்த கூத்தெல்லாம் காவியமாக்கி அரங்கேற்றப்பட்டன.
திரைக்கதை வசனமெல்லாம் வரலாற்று சாசனங்கள்.
ஆணுக்குரிய பிரச்சனை என்று சிலவற்றை அடுக்கினோம்.
ஆணுக்கே உரிய பிரச்சனை என்று சிலவற்றை அடுக்கினோம்.
உடனிருந்தது பெண் தோழிகள் ஆயிற்றே, இரண்டாம் பட்டியல் தான் நீளமாய் இருந்திருக்கும் என்று சொல்லவா வேண்டும்?
நீளத்தைப் பற்றி பேசுகையில்,
சரி, அது வேண்டாம்!
கிரிக்கெட் பால் கலாச்சாரம் முதல் கழிப்பறை அரசியல்வரை,
கால்சட்டை ஓட்டை முதல்
நட்போடு சேட்டை வரை,
கிளாஸ்ரூம் காதல் முதல்
கிளாஸ் பாட்டில் சண்டை வரை,
பென்சில் எழுத்து முதல் பேனாவிற்கு வளர்ந்த கதை,
கேலி கிண்டல் முதல் கேவலங்கள் நேர்ந்த முறை,
என நாடகத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் கம்பனுக்கு ஓப்ப!
உடனிருந்த பெண்டிரெல்லாம் கவனம் இழந்து போகாதவண்ணம் பெண்ணினத்தை பாசாங்கு செய்து அவ்வப்பொழுது ஒரு பஞ்ச்லைன்.
பஞ்ச்லைனுக்கு பதில் கொடுக்க, பெண்களும் அரங்கம் ஏற, “மூடிட்டு கேள்” என்று அடுத்த காட்சி துவங்கும்.
கேலி கிண்டலும், கூச்சல் கும்மாளமும், நக்கல் நையாண்டியும், நவரச நகைச்சுவையும் என நாடகக் காட்சி எல்லாம் நிகரில்லா உச்சத்தில்!
பள்ளிநாள் அன்றாடமெல்லாம் என்றோ நேர்ந்த அற்புதம்.
பிள்ளைநாள் அனுபவமெல்லாம் என்றோ பதித்த கால்தடம்.
பாதை நீண்டுதான் இருந்தது.
நாங்கள் பகிர்ந்த காட்சியில் பகிராத உணர்ச்சிகளே பயணத்தின் வாகனமாய் அமைந்திருந்தது.
அது அவனுக்கும் தெரியும்…
— அயலவன்