நான் கவிஞன்
நான் தீ
தாழும் உலகிலே எழுகிறேன்
வீழும் உலகிலே பறக்கிறேன்
குவிந்து விரிகிறேன்
விரிவை குவிக்கிறேன்
உரு நிலைக்கச் செய்வேன்
உருகுலைப்பேன்.
நான் கவிஞன்
நான் காற்று
நில்லேன் நிற்பவை நிற்க
வசப்படா வெளியை மூச்சாக்குவேன் நிறைந்து குறைப் படைப்பேன் குறைந்து நிறை சமைப்பேன்
துருவித் துளைப்பேன்
தழுவித் தக்கவைப்பேன்.
நான் கவிஞன்
நான் மலை
மேகம் நிறுத்தி மழை கேட்பேன்
சிகரமென உயர்ந்து வானளப்பேன் சரிவிலே வனம் வளர்ப்பேன்
ஊற்றாய்ப் பொங்கி கடல் நிறைப்பேன் உரசலில் உயர்ந்து நிற்பேன் ஆழக்குழம்பு தெளித்து நிலம் செய்வேன்.
நான் கவிஞன்
நான் மரம்
ஏகாந்தத் தவங்கிடப்பேன்
மேனி முறுக்கிக் கூத்தாடுவேன்
வானம் பகைத்து நிழல் தருவேன் இலையிடை கதிர் புகுத்தி குழைந்துக் கிடப்பேன்
பறவையாகி உலகளப்பேன் மண்புகுந்து நிலம் சுமப்பேன்.
நான் கவிஞன்
நான் கடல்
நில்லாது நிலமறிப்பேன்
உருவிழந்து வான் புகுவேன்
மேகமாகி நிறம் படைப்பேன்
மழையாகி நிலம் நிறைப்பேன்
தனியே தத்தளிப்பேன்
திரண்டு கரையுடைப்பேன்.
நான் கவிஞன்
நான் இசை
அரியவியலாதபடி ஆக்கங்கொள்வேன் காட்சியைக் களமாக்குவேன்
காலம் ஏமாற்றி அமுதூறுவேன்
மனம் பகடி செய்து சுயம் கரைப்பேன் அமைதி கேட்கச் செய்வேன் அனைத்திலும் அசைந்து அசைவறுப்பேன்.
நான் கவிஞன்
நான் மொழி
ஓசைப்படுத்தி உருகொடுப்பேன்
ஓசைக்கிடை பொருள் படுவேன் ஓசையில் உண்மை விரிப்பேன் ஒலித்து ஒளிந்து ஒன்றுபடுவேன்
ஓசை படுத்தி சமூகம் செய்வேன்
ஓசை பெருக்கி தனிமை திருப்புவேன்.
நான் கவிஞன்
நான் சாவு
நிதம் நச்சரிப்பேன்
அறம் பழக்குவேன்
இருத்தலை எடை போடுவேன் இல்லாமையில் சுகமளிப்பேன்
காத்திருப்பேன்
அன்பால் அந்தமறுத்தோற்கு அன்னையாவேன்.
நான் கவிஞன்
நான் கடவுள்
ஆக்கி அழித்து அளவளிப்பேன் ஆக்கப்படாது அளவறுப்பேன்
காப்பேன்
மறைப்பேன்
அருளிடுவேன்
அவ்வப்போது வரமும் அளிப்பேன்.
நான் கவிஞன் நான் அது வியாபிப்பேன் யாதுமாவேன்
யாதும் நானாவேன்
நானே யாதுமாவேன்
தனியாவேன்
வேற்றுமை அறுப்பேன்
ஒன்றாவேன்.
நான் கவிஞன்
— அயலவன்