
மனிதமே,
முரண்களின் பிரதிநிதியாய் பேசுகிறேன்!
உங்கள் பிரதிநிதியாய் பேசுகிறேன்!
நானும் ஒரு மயிராண்டி, உங்களைப் போலவே!
முரண்கள் நிறைந்த மயிராண்டி நான்!
மலைமுகட்டில் நின்றபடி கடற்கரையொன்று கண்டேன்.
நள்ளிரவு நாதத்திற்கு தாளமிட்டாள் ஆழியாள்.
கரையெங்கும் பல மின்விளக்கு, சிறிதும் பெரிதுமாய் பல வண்ணங்களில்.
கடல் ஆழத்தில் இரண்டு மின்விளக்கு, கருத்த படலத்தில் மிதந்த ஒளிக்கூரு.
கண்ணை பறித்தது கடல் விளக்கு,
அதிக வெளிச்சம் கக்கியதால் அல்ல ; வெளிச்சம் கக்கிய கடற்கரையிலிருந்து விலக்கம் கொண்டதால்.
“அந்தக் கடல்விளக்கு போல் இருந்துவிடு” என்றது நான் சோறு ஊட்டி வளர்த்த அசரீரி.
“தள்ளியே இருந்துவிடு என்கிறாயா? ஏன்?"
“சட்டென்று கண்ணில் படுவாய்! பார்த்தாயா?"
“விளக்கம் விளைக்கும் தனிமையைக் கூட கண்டுவக்கும் கண்கள் தேடுகிறாய்!” “தனிமையை தேடுகிறாய்; தனியாக இருப்பதற்கு அல்ல, தனித்து தெரிவதற்கு!” என்ன, நான் மயிராண்டி தானே?
— அயலவன்