
நள்ளிரவில், முன்பின் தெரியாத ஊரில், ஆளரவமற்ற கடற்கரைகளில் உங்கள் தனிமைகளை நீங்கள் கழித்ததுண்டா?
எண்ணிலடங்கா மணற்துகள்களில் ஒன்றாய் கிடந்தபடி அந்தக் கடற்பரப்பை பார்த்ததுண்டா?
அப்படி பார்த்தபோது அந்தக் கடல் உங்களிடம் என்ன சொன்னது?
அது என்னிடம் என்ன சொன்னது தெரியுமா?
“நீ பொய்களை நம்புகிறாய்” என்றது.
“என்ன பொய்? " என்றேன்.
ஓங்கி கன்னத்தல் அறைந்தது.
பின்பு, “என்ன தெரியும் உனக்கு? " என்று கேட்டது.
“எல்லாமே தெரியுமே! இப்பொழுது என்ன கேட்கிறாய்?” என்று வினவினேன்.
“வெளிச்சம் தெரியுமா உனக்கு?” என்று கேட்டது.
“தெரியுமே!” என்றேன்,
தன் இருளையெல்லாம் ஒன்றுதிரட்டி என் முகத்தில் எறிந்துவிட்டு, “இப்பொழுது சொல், வெளிச்சம் தெரியுமா உனக்கு?” என்றது.
“தெரியாது!” என்றேன்.
“இருளைத் தெரியுமா உனக்கு?” என்றது
“இதோதான் தெரிகிறதே!” என்றேன்.
தன்னுள்ளிருந்து செந்நிலாவை உதிக்கச் செய்துவிட்டு,
“இப்பொழுது சொல் இருளைத் தெரியுமா உனக்கு?” என்றது.
“இல்லை, தெரியாது!” என்றேன்.
“பசியைத் தெரியுமா உனக்கு?” என்றது.
“இதோ, இப்பொழுது எனக்கு பசிக்கிறது. அது எனக்கு தெரிந்துதானே இருக்கிறது” என்றேன்.
தன்னுள் வாழும் மீனொன்றை சாப்பிட கொடுத்துவிட்டு,
“இப்பொழுது சொல், பசியைத் தெரியுமா உனக்கு?” என்றது..
“தெரியாது!” என்றேன்.
“ருசியைத் தெரியுமா உனக்கு?” என்றது.
“நீ கொடுத்த மீனின் ருசிதான் எனக்கு தெரிகிறதே!” என்றேன்..
தன் உப்பையெல்லாம் காற்றின்வழி தூதனுப்பி வாயில் படியச் செய்துவிட்டு, “இப்பொழுது சொல், ருசி தெரியுமா உனக்கு?” என்று கேட்டது..
“இல்லை, தெரியாது!” என்றேன்.
“என் அழகைத் தெரியுமா உனக்கு?” என்று கேட்டது,
“என் கண் முன்னே தானே இருக்கிறாய். தெரிகிறது!” என்றேன்.
தன்னுள் கிடக்கும் குப்பை கழிவுகளையெல்லாம் கரைக்கு அடித்து வரச்செய்துவிட்டு,
“இப்பொழுது சொல், என் அழகைத் தெரியுமா உனக்கு?” என்று கேட்டது.
“இல்லை, தெரியாது” என்றேன்.
“என் அழுக்கைத் தெரியுமா உனக்கு?” என்று கேட்டது.
“இப்பொழுதுதான் அடித்துக் கொண்டு வந்ததே, தெரியும்.” என்றேன்.
“தன் உடலை சிலிர்த்துக் கொண்டு, மீண்டும் மீண்டும் அலைகள் அடிக்கச்செய்துவிட்டு,
“இப்பொழுது சொல், என் அழுக்கைத் தெரியுமா உனக்கு?” என்று கேட்டது.
அதன் அழகின் அலைக்கு ஆட்பட்டு,
“ தெரியாது” என்றேன்.
உன்னைத் தெரியுமா உனக்கு?” என்று கேட்டது.
“ஓ! நன்றாகத் தெரியுமே!” என்றேன்.
நானே இல்லாத ஆழத்திற்கு எனை அடித்துச் சென்றுவிட்டு,
“இப்பொழுது சொல், உன்னைத் தெரியுமா உனக்கு?” என்று கேட்டது.
“தெரியாது!” என்று என் குரல் தழுதழுத்தது.
“உலகைத் தெரியுமா உனக்கு?” என்று கேட்டது.
“இதோ, என் கண் முன்னே விரிந்து கிடக்கிறதே. தெரியும்!” என்றேன்.
“நீரை வாரி முகத்தில் எறிந்து, என் இமைகளை மூடச்செய்துவிட்டு, “இப்பொழுது சொல், உலகைத் தெரியுமா உனக்கு?” என்று கேட்டது.
“தெரியாது” என்றேன்.
“இப்பொழுது சொல், என்ன தெரியும் உனக்கு?” என்று கேட்டது,
“எதுவும் தெரியாது!” என்றேன்.
நீட்டிய பாதங்களில் சில முத்தங்கள் விதைத்துவிட்டு,
“இப்பொழுது வீடு செல்!” என்றது.
நங்கூரத்தை கையில் பிடித்தபடி,
“நான் வீட்டில் தான் இருக்கிறேன்!” என்றேன்.
என்னைப் பார்த்து புன்னகைத்தது அந்தக் கடல்
— அயலவன்