அலைமுகட்டின் தாளத்திற்கு 
அசைந்தாடிய பேராழி. 
மண்டியிட்ட கால்களிடம் 
ரகசித்த மணற்வெளி. 
பறந்திடும் வானத்தை 
பற்றிப்பிடித்த மலைப்பாறை. 
சிதறிய சிந்தனையை 
சேர்த்தளித்த கடல் காற்று. 
உதறிய எண்ணங்களுக்கு 
ஒளி ஊட்டிய நிலாக்கதிர். 
பருக்கை பருக்கையாய் 
பரவிக்கிடந்த விண்மீன் சமூகம். 
அழகின் அடைக்கலமாய் அமைந்த நிஜத்தின் நிழல்கள். 
அங்கொன்றும் இங்கொன்றுமாய் துடித்த
மனிதத் திடல்கள்.
இளங்காற்றோடு வீசிய 
உலகின் புதிர்கள். 
எங்கிருந்தோ துளிர்த்த 
மனத்தின் விடைகள். 
இங்கே, 
அறிவென்ற எல்லைக்கு அப்பாலிருந்து,
அறியவியலாவற்றின் பிரதிநிதியாய், 
எங்கிருந்தோ வந்து ஆட்கொண்டாள் என்னை,
கடலும், 
இசையும்…
— அயலவன்