ஆயிரம் ஆண்டு கற்சிலைமேல் விழுந்து என் நிழல்
புரண்டுப் படர்ந்து விலகியது.
காலம் சமத்துவவாதி இல்லை!
பட்டாம்பூச்சியின் சிறகடிப்பில் பூகம்பம் பிறக்குமாம்.
தன்னந்தனிமையிலே கலை பிறக்குமாம்.
கற்பனையில் பேரண்டம் பிறக்கிறது.
கற்பனையில் கடவுளே பிறக்கிறது.
காலத்தோடு போர் தொடுக்கப் போகிறேன்.
சமத்துவப் போராட்டம் செய்யப்போகிறேன்.
சாகாவரம் வேண்டாம் எனக்கு,
செத்தும் வரம் வேண்டும்.
காலம் நம்பிக்கை துரோகி.
நட்பை சாகடிக்கும்.
என்னைச் சாகடிக்கும்.
காலம் துறக்கப் போகிறேன்.
சமத்துவத்தில் கலக்கப் போகிறேன்.
நிரந்தரத்தின் அசௌகரியத்தில்
நிலையாமை தேடப் போகிறேன்.
காலத்தின் தற்காலிகத்தில் காலாந்தகம் தேடப் போகிறேன்…
நான் ஒரு முட்டாள்!
— அயலவன்