
செடியாய் இருக்கும்வரை புதர்களும் மரங்களும் நிழல் தந்தன.
இன்று மரமாகிவிட்டேன்.
வெய்யில் சுட்டெரிக்கிறது.
கால் மிதிபட்டு நசுங்குவதில்லை நான்.
இடி மின்னல் தேவைப்படுகிறது.
கிள்ளினால் முறிவதில்லை என் கிளைகள்.
கோடாலியோ பெரும்புயலோ வேண்டிக் காத்திருக்கிறேன்.
என் நிழலில் பஞ்சாயத்துக்கள் நடக்கின்றன,
தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.
தீர்ப்புகளுக்கு அப்பால் உள்ள என் இருத்தலை பகிர்வார் இல்லை.
பல கிளைகள் விரித்து வளர்ந்திருக்கிறேன்.
இலைகளோ நித்தம் துளிர்ப்பதும் உதிர்வதுமாய்.
கானம்பாடும் பறவையெல்லாம் ஒரு கூடு தந்து செல்கின்றன.
படரும் கொடி வண்ணமொன்று சேர்க்கிறது.
நானே சாய்ந்தாலும், முறிந்து விழுந்தாலும் வேர் மண்ணோடுதான் போகிறது,
ஆழத்தில், யார் கண்ணிலும் படாதபடி.
ஆடைகள் அணியாதவரை, அம்மணம் பொதுக்காட்சி.
இன்று பல உடைகள் பூண்டிருக்கிறேன்.
ஆடையின் ஆடம்பரங்கண்டு உவப்போர் இங்குண்டு.
சில துணியை பொக்கிஷமாக்கி காப்போரூம் இன்றுண்டு.
அம்மணத்தை காண்பார் இல்லை.
ஆணிவேரோ, அம்மணமோ மறைந்து மூடிபோனபின்,
இருத்தலின் ஏகாந்தப் இன்பப் பேருவெளியில்,
என்னையும் துறந்தபடி நிற்கிறேன்…
— அயலவன்