
பத்து நிமிட சிற்றின்பம்,
தேக சுகம்,
அலாதி இன்பம்!
இதழோடு பல முத்தங்கள்
மெல்லிய சூட்டில்
இதமாய்,
இங்கிதம் அறியாத இதயங்களாய்
எங்கும் கூடுவோம்,
அதை அனுதினம் நாடுவோம்!
பலர்சூழ இருப்பினும்
நாம் இருவர் மட்டும்
தனிமையில்,
ஓர்மையில்!
உன் அடையாளத்தில் நான் கொஞ்சமும்,
என் அடையாளத்தில் நீ கொஞ்சமும்,
பகிர்வோம்,
சேர்வோம்!
நாளுக்கு இரு வேளைகள்,
நடுவில் அளித்தாலும்
மறுப்பதற்கு மனமில்லை!
அடிமைப்படாதே என உலகத்தார்
அலறினாலும்,
என்னை விடாதே என நீ எழுப்பும்
கூக்குரல்,
உலகத்தவர் கைவிட்ட பொழுதிலும்,
நீ என்னோடு இருந்ததால்
உன் குரல் உரக்க கேட்கிறது
என் காதில்!
காதலியே!
என் தலைக்கு
ஏறும் பித்தே!
உனக்காக பல போர்கள் உலகெங்கும்,
வென்றேடுத்த என் கையில் நீ
என்றென்றும்!
உன் உடல் வெப்பம்,
இணையதளத்தில் வதந்தியாய்
என் உடலெங்கும் பரவுகிறது!
உன் சுவை,
சில சமயம் இனிப்பாய்,
சில சமயம் துவர்ப்பாய்,
சில நேரங்களில் கொஞ்சம் காரத்தோடு,
என பல்சுவையும் நாவில்
தாண்டவமாடுகிறது!
காலையும் மாலையும்,
நீ கொடுக்கும் முத்தம் இல்லையேல்,
காலம் உறைந்தே விடுகிறது!
முன் ஜன்ம வினைத்தொடர்ச்சி
இதவரை நீண்டதுபோல்
என்றும் தொடர
உன்னையே வேண்டுகிறேன்!
என் அருமை டீயே!
அன்புத் தோழியே!
தேநீரே!
சேர்ந்தே இருப்போம்,
சார்ந்தே இருப்போம்,
டீ…
— அயலவன்