Skip to main content

எனக்குமோர் வீடிருந்தது

122 words
Photo
Photograph: Neeraj Bharadwaaj

எனக்குமோர் வீடிருந்தது.
அடைசலில் அனுதினம் பொங்கும் அன்பின் ஒற்றிருந்தது.
அது காத்திருந்தது.
மாதம் இருமுறையேனும், என் வருகைக்கு காத்திருந்தது.
சோறு தந்தது.
அகநகையோடு அதை ஊட்டிவிட்டது.
ஊர் தந்தது.
உல்லாச பயணங்களில் அதைக் சுற்றிக் காட்டியது.
கதைகள் சொன்னது.
காக்கை குருவியெல்லாம் வாழ்க்கைக்கு அர்த்தம் சொன்னது.
உறக்கம் தந்தது.
அருகிலே தட்டிக்கொடுத்தபடி தாலாட்டு பாடியது.
ஆசைகள் விதைத்தது.
வாழ்நாளெங்கும் செய்ய செயல்கள் தந்தது.
நினைவுகள் தந்தது.
எண்ணிப் பார்த்தாலே மனம் நெகிழ வைத்தது.
முத்தம் தந்தது.
ரோமச் சிலிர்ப்பில் தன்னைப் பதித்துக் கொண்டது.
ஏக்கம் தந்தது.
வாழ்நாளில் இனி சாத்தியப் படாது துயரம் தந்தது.
கலைகள் தந்தது
வாழ்க்கையின் உன்னதங்களை அள்ளித்தந்தது.
பக்குவம் தந்தது.
நிதானித்து செயல்பட முன்னோடி தந்தது.
உவப்புத் தந்தது.
அன்பும் அக்கறையும் உள்ளம் நிரம்பச் செய்தது.
அறங்கள் தந்தது.
அதை ஆசையாய் கற்றுக்கொள்ள அனுபவத்தில் களமமைத்தது.
பிரிவு தந்தது.
மரணத்திற்கு அப்பாலும் ஆழ்மனதில் அது வியாபித்தது.
விசித்திரம் தந்தது.
அந்த தெரு வழி போகும்போதெல்லாம் புயல்காற்று தந்தது.
சுவற்றிலே இரண்டு புகைப்படங்களில் தன்னை அடைத்துக்கொண்டு,
என்னைப் பார்த்து சிரிக்கிறது.
எனக்குமோர் வீடிருந்தது…

— அயலவன்

Neeraj Bharadwaaj
Author
Neeraj Bharadwaaj
Unapologetically curious