
அன்பு செய் அன்பு செய் என்று அரற்றுவர் மனிதர்.
துன்பம் தலைநனைத்து நடுங்கும் பொழுதிலும்
அன்புக் கதிர்கொண்டு குளிர்காய் என்பர்.
திக்குத் தெரியாது தத்தளித்து மிதக்கையிலும்
அன்புக் கரையொதுங்கி வாழப் பழகென்பர்.
மகனின் சடலத்தை அணைக்கும் தாய்க்கு
பொங்கும் ஊற்று அன்புதான் என்பர்.
வீழ்ந்த எதிரிக்கு கைகொடுக்கும் தோள்கூட
தோற்றுப்போனது அன்பிடம் என்பர்.
காக்கும் கடவுளும் காணாது போகையில்,
அன்பின் வழிநடந்து தேடல்கொள் என்பர்.
சுற்றமும் நட்பும் சீற்றங்கொண்டு வெறுக்கையிலும்,
அன்பள்ளித்தந்து அரவணை என்பர்.
உதித்த தாய்மண்ணே அந்நியமாக்கி ஒதுக்குகையிலும்,
அன்பின் துணைகொண்டு தாய்நாடு சேர் என்பர்.
அன்பு செய் அன்பு செய் என்று அரற்றும் மானிடா,
செய்ய வேண்டிய அன்பு யாதென்று சொல்!
அன்பு யாதென்ற கேள்வியின் முன்னிலும்,
என் மொழியும் தோற்றது அன்பிடம் என்பேன்…
— அயலவன்