
ஆடைகள் அணிவிக்கப்படாத ஆர்வமும் உண்டெனக்கு;
அதன் அம்மணத்தை என்னாலேயே ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
நிர்வாணம் ஒருவரின் அந்தரங்கமாம்;
அதை அரங்கமெறி அறிவித்தால் அதற்கு என்ன களங்கம் உண்டாகுமோ?
“இதில் நாட்டம், அதில் நாட்டமில்லை;
இதன் பேரில் ஆர்வம்; அதன் பேரில் ஆர்வமில்லை” என்றெல்லாம் வரையறுக்க வேண்டுமென
என்னிடம் நானே சொல்லிக் கொள்கிறேன்.
சொல்வதை எல்லாம் செய்து விட முடிகிறதா?
ஆடைகள் அணிவிப்பதால் அம்மணம்தான் அழிகிறதா?
ஆடைகளில் அடையாளம் கொண்டால் அம்மணமே அச்சுறுத்துமோ?
இது அருகம்புல்லிற்கான பசி என்று மாடுகள் அறிகின்றனவா?
இது மான்கறிக்கான தாகம் என்று வேங்கைகள் சொல்கின்றனவா?
உணவைத் தரம் பிரித்த மனிதமனம், பசியையும் தரம் பிரிக்கலாமோ?
ஆடைகளை வகைப்படுத்திய சிந்தனை, அம்மணத்தையும் வகைப்படுத்தலாமோ?
வகைப்படுத்தி, தரம்பிரிக்க அவை என்ன தனித்தனியே திகழ்கின்றனவா?
பிரிவினை என்ன என் காட்சிப்பிழையா?
நாகரீகம் நமக்கு நல்கியது பகுத்தறிவுதான் என்றால், பகுப்பதில்தானே அறிவே பிறக்கிறது
அறிவுக்கான ஆர்வத்தை அறிந்து கொள்ள முடியுமா?
புரிதலுக்கான நாட்டத்தை புரிந்து கொள்ள இயலுமா?
என் அம்மணத்தின் பிம்பத்தை காணும் கண்கள்,
அம்மணத்தை காணவியலுமா?
— அயலவன்