
நித்தம் காலைக் கல்லூரி நடை,
எழும்பூர் குழந்தை மருத்துவமனைச் சாலையோரம்.
வாழத்துவங்கிய சக உயிரினங்களுக்கு வாழும் வழியில் பல தடங்கல்கள்.
கையுடைந்த குழந்தைக்கு கையற்றது ஆறுதல்;
கால் ஊனக் குழந்தைக்கு கால் அறுத்தது ஆறுதல்;
துடித்து நடுங்கும் குழந்தைக்கு சகவயதுப் பிணங்கள் ஆறுதல்.
இருத்தல் எனும் உன்னதத்தின் கோரங்கள் மேலெழ,
அறிவியல் எனும் அற்புதத்தின் அடைக்கலம் நிழல்தர,
மாற்றத்தையும் தேற்றத்தையும் நாடிக் கிடக்கும் மனிதர்கள்!
மருத்துவமன வாயிலில் மாரியம்மன் சிலை, அறிவின் எல்லைக்கப்பாலுள்ள நம்பிக்கையைப் போல்!
அறிவியல் நிழலில் இளைப்பாரும் மாக்களுக்கு பரிவின் உருவான பரப்பிரம்மச்சிலை!
நாடி வந்த அறிவியல் கைவிடத்துவங்கினால், தேடிச் செல்லாதிருக்க ஆண்டவருக்கோர் இருப்பிடம்…
— அயலவன்